மறைந்த முதலமைச்சர் , எம்.ஜி.ஆரால், சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட கதாநாயகி, லதா. அ.தி.மு.க.,வின் ஆரம்ப கால உறுப்பினர். எம்.ஜி.ஆர்., மற்றும் ரஜினியுடனும் ஜோடியாக நடித்துள்ளார். அ.தி.மு.க.,வில் உள்ள அவர், கடந்த ஏப்ரலில் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில், கட்சி வேட்பாளர்களைஆதரித்து பிரசாரம் செய்தார். ஆனாலும், வேலுார் தேர்தல் பிரசாரத்திற்கு, அவரை அனுப்பவில்லை. 

அதிருப்தியில் உள்ள அவர், நடிகர் ரஜினி கட்சி துவக்கினால், அதில் சேர்ந்து விடுவார் என்ற பேச்சு எழுந்துள்ளது. எனவே, அவருக்கு துணை கொள்கை பரப்பு செயலர் பதவி வழங்கப்படும் என, தெரிகிறது. 

அதே நேரத்தில் வேலுார் பிரசாரத்திற்கு, நடிகை விந்தியா அனுப்பி வைக்கப்பட்டார். அவரது பேச்சு, பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால், விந்தியாவுக்கும், துணை கொள்கை பரப்பு செயலர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
.

அதிமுகவில் துணை கொள்கை பரப்பு செயலர் பதவி, மறைந்த நடிகர், எஸ்.எஸ்.சந்திரனுக்காக உருவாக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பின், அப்பதவிக்கு, பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நியமிக்கப்பட்டார். 

தற்போது, துணை கொள்கை பரப்பு செயலர்களாக, முன்னாள் அமைச்சர்கள், வைகை செல்வன், பொன்னுசாமி, செ.மா.வேலுச்சாமி ஆகியோர் உள்ளனர். கூடுதலாக, லதா, விந்தியா இருவருக்கும், அப்பதவியை வழங்க, கட்சி மேலிடம்  முடிவு செய்துள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.