“தங்களை நேற்று காலை 11 மணி அளவில் சந்தித்து கோரிக்கை விடுத்து, திரும்பி நாங்கள் நகரி வந்து சேர்வதற்குள், உங்கள் அரசின் உத்தரவு வந்து சேர்ந்தது.”
மின்னல் வேகம் என்பார்கள். ஆனால், அதைவிட வேகமானதை இனி ஸ்டாலின் வேகம் என்றே குறிப்பிடலாம் என்று நடிகையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரோஜா பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரோஜா, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், “எங்கள் தொகுதியில் மற்றும் சித்தூர் மாவட்டத்தில் வசிக்கிற தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி பாடத்திட்டத்துகான 10 ஆயிரம் புத்தகங்கள் இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். தங்களை நேற்று காலை 11 மணி அளவில் சந்தித்து கோரிக்கை விடுத்து, திரும்பி நாங்கள் நகரி வந்து சேர்வதற்குள், “ நகரி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கே. ரோஜாவின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசின் பாடத்திட்டங்களை சித்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு 2021-22-ஆம் ஆண்டின் கல்வி ஆண்டின் 1 - 10 வகுப்பு வரையிலான ஆண்டு தமிழ் பாட நூல்கள் வகுப்புக்கு தலா 1000 பிரதிகள் வீதம் இக்கழகத்தின் சென்னை வட்டார அலுவலக மற்றும் அடையாறு கிடங்கில் இலவசமாக பாட நூல்களை பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்துக்கொள்கிறது” என்று தங்கள் அரசு உத்தரவு என்னுடைய அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது.

மின்னல் வேகம் என்பார்கள். ஆனால், அதைவிட வேகமானதை இனி ஸ்டாலின் வேகம் என்றே குறிப்பிடலாம் என்றே சந்தோஷத்தில் பாராட்டத் தோன்றுகிறது. எங்கள் கோரிக்கைகளை ஏற்று சித்தூர் மாவட்டத்தில் வாழ்கிற தமிழ் குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ் மொழி புத்தகத்தை வழங்கிய தங்களுக்கு ஆந்திர வாழ் தமிழர்கள் வாழ் சார்பில் இதயம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கடிதத்தில் ரோஜா தெரிவித்துள்ளார். ரோஜாவும் அவருடைய கணவரும் இயக்குநருமான ஆர்.கே. செல்வமணி சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பட்டால் ஸ்டாலின் உருவம் பொறித்த பொன்னாடையை நேற்று வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
