அதிமுக கண்டுகொள்ளாததால், அந்தக் கூட்டணியிலிருந்து விலகிய சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் தேர்தலில் கைகோர்த்துள்ளது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அரசியல் கட்சியை எதிர்பார்க்கும் மக்கள், தங்கள் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்று சமத்துவ மக்கள் கட்சி எதிர்பார்க்கிறது. இந்தத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள சரத்குமார், தனது மனைவியும் கட்சியின் மகளிர் அணி தலைவியுமான ராதிகாவை கோவில்பட்டி அல்லது வேளச்சேரி தொகுதியில் களமிறக்க திட்டமிட்டுள்ளார்.
இரு தொகுதிகளில் ஒன்றில் ராதிகாவை களமிறக்க திட்டமிட்டிருந்தாலும் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம் என்று சமக  தரப்பில் கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகளைப் பெற்றது. இதில் வேளச்சேரி தொகுதியில் மட்டும் 23,099 வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது. எனவே, இந்தத் தொகுதியில் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பது சமகவின் எண்ணம்.
மேலும் சரத்குமார் - ராதிகா வீடு அமைந்துள்ள கொட்டிவாக்கம் பகுதி வேளச்சேரி தொகுதிக்கு மிக அருகே அமைந்துள்ளது. இதுவும் வேளச்சேரி தொகுதி மீது சரத்குமார் - ராதிகாவின் பார்வை பதிய ஒரு காரணமாகும். எனவே, வேளச்சேரி தொகுதியில் ராதிகா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வேளச்சேரி தொகுதியை கமல்ஹாசன் விட்டு தருவாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.