போன வாரம் வரை பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்த நடிகை குஷ்பு, அக்கட்சியில் ஐக்கியமானார். டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய அவர், இன்று தமிழக பாஜக தலைமையகமான கமலாயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து நடிகை குஷ்பு, ‘காங்கிரஸ் மூளை வளர்ச்சி இல்லாத கட்சி’ என்று காட்டமாகவும் விமர்சித்தார்.   
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை ‘மூளை வளர்ச்சி’ இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி நடிகை குஷ்பு விமர்சனம் செய்ததற்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது, ‘மூளை வளர்ச்சி இல்லாதவர்களை சிறுமைப்படுத்தும் செயல், இது கண்டிக்கத்தக்கது” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல ‘டிசம்பர் 3 இயக்கம்’  நடிகை குஷ்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. “மூளை வளர்ச்சியின்மை தன்மையை பயன்படுத்தி  நடிகை குஷ்பு விமர்சித்துள்ளது தவறு. அதை கடுமையாக எதிர்க்கிறோம். 69 குழந்தைகளில் ஒரு குழந்தை மூளைவளர்ச்சி குறைவாக இருப்பது இயற்கை. அந்தக் குழந்தைகள் எந்த வகையில் சிறுமை? அரசியல் எதிரியை இப்படி விமர்சிப்பது முறையா? குஷ்பு இப்படிப் பேசியது சட்டப்படி தவறு” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.