திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெய்னரில் சிக்கிய ரூ.560 கோடி யாருடைய பணம் பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூரில் துரைமுருகனின் ஆதரவாளர்கள் தொடர்புடைய இடங்களில் ஐ.டி. துறையினர் நடத்திய ரெய்டில் கோடிக்கணக்கான பணம் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதைப் பற்றி அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெயினரில் சிக்கிய பணம் குறித்து குஷ்பு கேள்வி எழுப்பினார். 
“தேர்தல் அதிகாரிகளும் வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தி கட்டுக்கட்டாகப் பணத்தை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் சோதனை நடத்தட்டும். எவ்வளவு பணம், அது யாருடைய பணம் என்பதைக் கண்டுபிடித்து சொல்லட்டும். அதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லாரியில் ரூ.560 கோடி பிடித்தார்களே? அந்தப் பணம் என்ன ஆனது? அது யாருடைய பணம்? எங்கிருந்து வந்தது? என்ற விவரங்களை இன்னும் சொல்லவில்லையே. அது ஏன்?
சுகாதார துறை அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியபோது ஆவணங்களை தூக்கிக்கொண்டு எல்லோர் கண் முன்னால் ஒருவர் ஓடினாரே. அது என்ன ஆவணம்? அந்த ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டதா? இதுவரை அதைப்பற்றி எதையும் சொல்லவில்லையே. அது ஏன்? நடந்ததை மறப்போம் என்று அதை மறைக்க சொல்கிறார்களா? உங்களுக்கு வந்தால் ரத்தம். எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற கதையா இது?” என்று குஷ்பு கேள்விகளை எழுப்பினார்.
