வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தயாராகிவிட்டார். ஏற்கனவே அவர் ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் வட்டார, நகர நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார்.

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் சேரும் விழா பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் ஈவிகேஎஸ் இளங்கோவனோடு கலந்துகொண்ட நடிகை குஷ்பு பேசும்போது,

“நான் தேர்தல் பிரசாரத்தை நம் தலைவர் இளங்கோவனுக்காக இந்தத் தொகுதியில் இருந்து தொடங்குகிறேன். பிரியங்கா வருகையால் மோடி ஆடிப் போயிருக்கிறார். தொண்டர்களின் நாடித் துடிப்பை உணர்ந்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். கடந்த தேர்தலில் அவர் நின்று தோல்வி அடைந்தாலும் இந்த முறை அவரை ஈரோட்டில் வெற்றிபெற வைப்பேன்” என்று சபதமிட்டார் நடிகை குஷ்பு.

தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக ஈரோடு தொகுதியை மதிமுகவும் கேட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.