நடிகர்கள் செந்தில், குண்டுகல்யாணம் ஆகியோர் ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக நிர்வாகிகளுடன் டி.டி.வி ஆலோசனை நடத்தினார்.

சசிகலா, சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் முன் எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற குழு தலைவராகவும் டி.டி.வி தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்து விட்டு சென்றார்.

பின்னர், சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபித்ததால் எடப்பாடி முதலமைச்சராக தேர்வானார். ஆனால் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியே செல்லாதபோது அவர் நியமித்த பதவிகள் மட்டும் எவ்வாறு செல்லும்? என ஓ.பி.எஸ் தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே சசிகலா அணி ஆதரவாளர்களை ஓ.பி.எஸ் தரப்பும், ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர்களை சசிகலா தரப்பும் மாறி மாறி தங்கள் வசம் இழுக்க போராடி வருகின்றனர்.

மேலும் இருதரப்பினரும் அதற்காக பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர்கள் செந்தில், குண்டுகல்யாணம் ஆகியோர் ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குப்புசாமி, அனிதா குப்புசாமி, அஜய்ரத்தினம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளோடு டி.டி.வி தினகரன் ஆலோசனை நடத்தினார்.

இதில், கட்சி நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் அவைத்தலைவர் செங்கோட்டையன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நடிகர்கள் ஆனந்தராஜ், ராமராஜன், மனோபாலா,அருண் பாண்டியன், லதா, பாத்திமா பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் ஓபிஎஸ்சிடம் ஐக்கியமாகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.