காவிரி தாயுடன் உரையாடுவது போன்று நடிகர் விவேக் உரைநடை கவிதை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஐபியல் போட்டி நடத்துவதற்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐபிஎல் போடியை தள்ளி வை அல்லது வேறிடத்தில் போட்டியை நடத்து என்று அவர்கள் கூறி வந்தனர்.

ஆனாலும், ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடத்தப்பட்டது. போட்டி நடத்தப்படுவதற்கு முன்பு, மைதானத்தை சுற்றிலும் ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பாரதிராஜா, வைரமுத்து, சீமான், தங்கபச்சான், வெற்றிமாறன், ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், நடிகர் விவேக், காவிரி தாயுடன் உரையாடல் என்ற பதிவு ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் காவிரித்தாயுடன் பேசுவது போன்று உரைநடை கவிதையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த உரையாடலில் கன்னடர் உந்தன் உடன் பிறப்பு, காவிரியும் உனது நீர்ப் பரப்பு, இதை உரக்கச் சொல்; உன் உரிமை சொல் என்று முடிகிறது அந்த கவிதை.

நான்: காவிரித் தாயே! காவிரி தாயே! 
கன்னட மண்ணில் பூ விரித்தாயே! - ஏன்? 
தமிழ்மகன் கேட்டால் கை விரித்தாயே?

காவிரி: முத்து மகனே! முட்டாள் மகனே! 
கைவிட்டது நானா நீயா? 
செழித்துப் பாய்ந்தேன்; நீ சேமித்தாயா? 
ஆழியில் கலக்கும்முன் அணை செய்தாயா?

நான்: இனி நான் என்ன செய்ய? சொல்வாயா? 

காவிரி: சினிமா பார்த்து சிரி
கிரிக்கெட், பாப்கார்ன் கொறி!
மழுங்கி போனதே உன் வெறி

நான்: தாயே என்னை மன்னிப்பாயா?

காவிரி: எழுந்து நில்! தயக்கம் கொல்!
இரைப்பை நிரப்புவது கலப்பை!
இதை உணராதவன் வெறும் தோல் பை
நான் உனக்கும் அன்னை
கன்னடர் உந்தன் உடன் பிறப்பு
காவிரியும் உனது நீர்ப் பரப்பு
இதை உரக்கச் சொல்; உன் உரிமை சொல்