தமிழக அரசியலும், தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களும் புருஷன் பொண்டாட்டி போலத்தான்.  சம்பந்தம் இல்லாத ஏரியாவில் இருந்தாலும் கூட இருவரையும் விதி சேர்த்து வைக்கும். திடீரென கட்டிக் கொள்வார்கள், திடீர் திடீரென முட்டி மோதி, மண்டையை உடைத்துக் கொள்வார்கள். ஆனால் டைவர்ஸ் வாங்கிக் கொண்டு ஒரேடியாக பிரிவது மட்டும் நடக்காது. சண்டையோடேதான் தொடரும் இந்த தாம்பத்யம். 

இந்த போக்கானது சமீப காலத்தில் மிக அதிகமாகிவிட்டது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரும் இல்லாத நிலையில், தமிழக அரசியலில் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களின் கவனம், கண், கால் என எல்லாமே அழுத்தமாக பதிய துவங்கிவிட்டன. தங்கள் துறைக்குள் மூக்கை நுழைக்கும் நடிகர்களை சில அரசியல்வாதிகள் மூக்கை உடைப்பதும், சிலரோ மூக்குத்தி மாட்டிவிட்டு அழகு பார்ப்பதுமாக ரெட்டை ரியாக்‌ஷன் தொடர்கிறது. 

அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் செயல்படுவதில்  அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என இரண்டு கட்சிகளுமே கெத்தாக நிற்கின்றன. இதில் ஆளுங்கட்சியைப் பொறுத்தவரையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியோ வெகு வெளிப்படையாக ரியாக்ட் செய்கிறார். குறிப்பாக இந்துத்வத்தை ஆதரிக்கும் ரஜினியை ஆதரிப்பதும்,  அதற்கு எதிராக செயல்படும் கமல், விஜய் போன்றோரை விமர்சித்து வீழ்த்துவதுமாக இருக்கிறது அமைச்சரின் பேச்சுகள். அதிலும் கமல்ஹாசனை ‘நாக்கை அறுக்க வேண்டும்’ எனும் அளவுக்கு ரா.பா. பேசியது செம்ம ரகளை. 

அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியை தட்டியிருக்கும் இவர் விஜய்யை தூர் வாரி துடைத்து எறிந்திருக்கிறார் தூர. 
எப்படி?யென்றால் இப்படித்தான்....”நான் இந்துக்களுக்கு ஆதரவாகவே பேசுகிறேன் என்று சிறுபான்மையினர் மத்தியில் ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர் எதிர்க்கட்சியினர். அது உண்மையில்லை. 


நான் சின்ன வயசுல இருந்தே ரஜினியை ரசித்தவன். அந்த வகையில அவரோட செல்வாக்கு எனக்கு தெரியும். விஜய்யை அவர் கூட ஒப்பிடவே முடியாது. இந்த விஜய் இருக்கிறாரே அவரு சூழ்நிலைக்கு ஏத்தாமாதிரி பல்டி அடிப்பாரு. நேரத்துக்கு ஏத்தா  மாதிரி தன்னை மாத்திக்குவாரு. 
ஆனா ரஜினி அப்படியில்லை. சொன்ன கருத்தில் கில்லி மாதிரி உறுதியா இருப்பார். ரஜினி அரசியலுக்கு வருவது அவரோட விருப்பம். அவரை களத்துக்கு வராமல் தடுக்க நாங்க விரும்பலை. எங்க கட்சிக்குன்னு பெரிய செல்வாக்கு இருக்குது. அதை வெச்சு தேர்தல்ல வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்போம். 

நான் இப்பவும் சொல்றேன்! ரஜினிக்கு போட்டி அஜித் மட்டும்தான். விஜய் கிடையவே கிடையாது.” என்று வெளுத்திருக்கிறார். 
ஓ.....அவரு ’ஜோசப்’ விஜய்! அப்படிங்கிறதுதான் பிரச்னையா?
-    விஷ்ணுப்ரியா