நமது தலைவரை (மு.க. ஸ்டாலின்) தமிழக முதல்வராக நாற்காலியில் அமர வைக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதை தவற விட்டுவிடாதீர்கள் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “ஸ்டாலின் முதல்வராக கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.


“நான் பிரசாரம் போன இடங்களில் எல்லாம் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து ஆதரவு தெரிவித்து விட்டு போகிறார்கள். அதிமுகவைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். நீங்கதான் ஜெயிக்கப் போறீங்க என்று கையைக் குலுக்கிவிட்டு போகிறார்கள். நான் அவர்களிடம் ஏன் இப்படி சொல்கிறீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் மோடியின் பருப்பு தமிழகத்தில் வேகாது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், எங்களுக்கு வேறு வழி இல்லை. 2 அடிமைகளிடம் சிக்கி நாங்கள் தவிக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா இறந்த பிறகு கொஞ்சம் இருந்த மரியாதையும் போய்விட்டது. அதனால்தான் இப்படி பேசுகிறோம் என்றார்கள்.


ஈவு இரக்கமின்றி கருணாநிதி உடலை அடக்கம் இடம் தர மறுத்த இந்த ஆட்சியை தூக்கிப் போட்டு மிதிக்கும் நேரம் வந்துவிட்டது. அதற்கு நீங்கள் தி.மு.க. கூட்டணியை 40 தொகுதியிலும் வெற்றி பெற செய்யவேண்டும். 22 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற செய்யவேண்டும்.
ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்த நாள். அன்று நமது தலைவரை (ஸ்டாலின்) தமிழக முதல்வர் நாற்காலியில் அமர வைக்கும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. அதை தவற விட்டு விடாதீர்கள்.”
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.