Actor SV We have kept the away from the party

கோவையில் இன்று தமிழக பா.ஜ.க தலைவர், தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது எஸ்.வி சேகரை, தற்போது வரை தமிழக காவல்துறையால் கைது செய்ய முடியவில்லையே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதில் கொடுத்துள்ள தமிழிசை, பெண்களை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கூறி, எஸ்.வி சேகரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளோம் என்றும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய இவர், மோடியின் மக்கள் மருந்தகம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் மருத்துவ செலவுகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார். அதே போல் தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க வேண்டும் என சிலர் திட்டம் போட்டு கிராமங்களுக்கு சென்று ரகசியமாக ஆட்களை திரட்டி வருகிறார்கள் என்றார். 

ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற போராட்டங்களை நடத்தி அமைதியை சீர்குலைக்க சதிதிட்டம் நடந்து வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் போட்ட திட்டம் அதிர்ச்சி அளிக்கிறது என்ற அவர் அரசியலில் எதிர்கட்சிகளை, எதிரி கட்சிகளாக பார்க்கக்கூடாது என கேட்டுக்கொண்டார். நீட் தேர்வை பொருத்தவரை அதிகம் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதாக கூறிய அவர், மொத்தம் 4000 மருத்துவ சீட்டுகள் தான் உள்ளதாகவும், இதில் சேர மாணவர்கள் எப்படி முன்னேறி வருகிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றார்.

பல ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதனை முன்னிலைப்படுத்தாமல் தோல்விகளை மட்டுமே பெரிது படுத்துவது வேதனை அளிக்கிறது என்றார். எனினும் தமிழிசை சௌந்தரராஜன் எஸ்.வி சேகரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளோம் என்று அதிரடியாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.