நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதையடுத்து நடிகர் சூர்யா மத்திய அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நீதிமன்றத்தையும் விமர்சனம் செய்திருந்தார். “கொரோனாவுக்கு பயந்து காணொலி காட்சி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் சென்று தேர்வு எழுத உத்தரவிடுகிறது” என்று நடிகர் சூரியா விமர்சனம் செய்திருந்தார்.  நடிகர் சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிமன்ற தலைமைக்கு கடிதம் எழுதினார்.

 
அதேவேளையில் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்குக் கூட்டாக கடிதம் எழுதினர். பெண் வழக்கறிஞர்கள் சங்கம், மூத்த வழக்கறிஞர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர். இந்நிலையில் சூர்யா வெளியிட்ட அறிக்கையில் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சித்த விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியம் இல்லை எனத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
அதே வேளையில் கொரோனா காலத்தில் நீதிமன்றப் பணியை அறிந்துகொள்ளாமல் சூர்யா விமர்சித்திருப்பது சரியல்ல எனவும்  நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் நடிகர் சூர்யா இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “இந்திய நீதித்துறையின் பெருந்தன்மை எனக்கு நிறைவை தருகிறது. நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். நான் எப்போதும் நம்முடைய நீதித்துறையை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். இது நம்முடைய மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான ஒரே நம்பிக்கை. நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என அதில் சூர்யா தெரிவித்துள்ளார்.