மதுரை அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா ஐந்து லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார் ,  இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம் பி அவர்கள் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இப்போது தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது . நோய் பரவலைக் கட்டுபடுத்த  ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய நடுத்தர கூலித்தொழிலாளர்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர் . இதனால் லட்சக்கணக்கான மக்கள் பசி பட்டினிக்கு ஆளாகி  வருகின்றனர் . இந்நிலையில்  மதுரையில் தனித்திருப்பவர்கள், கைவிடப்பட்டவர்கள், கவனிப்பாரற்ற முதியவர்கள் என உணவு சமைத்து சாப்பிட வழியின்றி தவிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு மதிய உணவினை அவர்களின் இருப்பிடம் சென்று தருகின்ற முயற்சியினை கடந்த மே 1 ஆம் தேதி ”மாமதுரையின் அன்னவாசல்” என்ற பெயரில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் முயற்சியில் துவங்கப்பட்டது.

 

கொடையாளர்களின் பொருளுதவியோடு, இருநூற்றுக்கும் மேற்ப்பட்ட  தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் நாள்தோறும் மூவாயிரம் பேருக்கு மதிய உணவு வழங்க முடிவு செய்யப்பட்டு திட்டமிட்டபடியே செயல்பட்டு வருகிறது ."நோய் எதிர்ப்பாற்றல்" இந்த ஒற்றைச் சொல்தான் இன்றளவில் கரோனாவிற்கு எதிரான உலகின் ஒரே ஆயுதம். வாக்சின்கள் வரும் வரை, வைரசைக் கொல்லும் மருந்து வரும் வரை, நம்மை விட்டு அந்த வைரஸ் முற்றிலும் நீங்கும் வரை, நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் மட்டும்தான் நம்மை பாதுகாக்கும். அந்த எதிர்ப்பாற்றலுக்கான அடிப்படை உணவு, எதிர்ப்பாற்றலை வெள்ளையணுக்கள் வழியே, ஆண்டிபாடிகள் வழியே, மண்ணீரல் வழியே, எலும்பு மஞ்சைகள் வழியே இன்னும் நவீன உலகம் இதுகாறும் கண்டறியாத ஒவ்வொரு வழியிலும் எடுத்துதர நாம் அறிந்த ஒரே உணவு புரதம் மட்டும்தான். அந்த புரதத்தை முழுமையாக கொடுக்கும் மிக முக்கிய உணவு முட்டை. எனவே வரும் 10 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை முதல் “மாமதுரை அன்னவாசலில்” முட்டையுடன் கூடிய உணவு வழங்கப்படும் என அறிவித்தார் எம்.பி வெங்கடேசன்,

இந்நிலையில் இதைக் கேள்விப்பட்ட நடிகர் சூர்யா  " மாமதுரையின் அன்னவாசல்" திட்டத்துக்கு 5 லட்ச ரூபாய் நன் கொடை வழங்கியுள்ளார் . இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன். 3000 பேருக்கு உணவு வழங்கித் துவங்கப்பட்ட இத் திட்டம் இன்றைய நிலையில் நாள்தோறும் 4500 பேருக்கு முட்டையுடன் மதியவுணவு வழங்கப்படுகிறது.  400க்கும் மேற்பட்ட தன்னார்வளர்கள் உணர்வுப்பூர்வமாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்."ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா.  இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார். நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 இலட்ச ரூபாயை நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்து மகிழ்ந்திருக்கின்றார் திரைக்கலைஞர் சூர்யா. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என வெங்கடேசன் நடிகர் சூர்யாவை பாராட்டியுள்ளார்.