actor sarathkumar pressmeet

சினிமா துறையில் கந்து வட்டி இல்லை என்று நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது நடிகரும், இயக்குநருமன சசிகுமார், சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தனது உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார், கந்து வட்டி கொடுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பைனான்சியர் அசோக்குமாரின் டார்ச்சர் குறித்து அசோக்குமார் கைப்பட கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான பைனான்சியர் அன்புசெழியனை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் சினிமா பைனான்சியருக்கு ஆதரவாக தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் ராஜ்குமார், சீனு ராமசாமி உள்ளிட்ட பலர் அன்புச்செழியனுக்கு ஆதரவாக கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், சமக தலைவருமான சரத்குமார், சினிமாவில் கந்து வட்டியே கிடையாது
என்று கூறியுள்ளார். இது குறித்து நடிகர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

சினிமா துறையில் கந்து வட்டி குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சரத்குமார். நான் 33 வருடங்களாக இதே துறையில் இருக்கிறேன். என் அனுபவத்தில் கந்து வட்டி கிடையாது. வங்கிகளில் திரைப்பட தொழில் அங்கீகரிக்கப்படாததால் சொத்துக்கள் அடமானம் வைத்தால்
மட்டுமே கடன் பெற முடியும். கடனைக் கட்டவில்லை என்றால் சொத்துக்களை வங்கி ஜப்தி செய்யும். அதேபோல பைனான்சியர்களிடம் கடன் வாங்கினால் திருப்பித் தர வேண்டும். இல்லை என்றால் பிரச்சனை நேரிடுகிறது. இது கந்து வட்டி கொடுமை கிடையாது என்றார்.

அசோக்குமாரின் தற்கொலை வருத்தம் தருகிறது. தற்கொலை எதற்கும் ஒரு தீர்வு ஆகாது. அவர் தற்கொலை செய்திருக்கக் கூடாது. அன்புச்செழியன் அசோக்குமாருக்கு கடன் கொடுக்கவில்லை என சொல்வதையும் ஆராய வேண்டும். அது குறித்து விசாரணையும் நடத்த வேண்டும் என்றும் சரத்குமார்
கூறினார்.