பாமக கட்சி மாநில துணைத்தலைவராக இருந்த,  நடிகர் ரஞ்சித் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து, பாமக கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.

வரும் மக்களவை தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிட உள்ளது. தற்போது இக்கட்சிக்கு 7 தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. 

பாமக கட்சி, அதிமுகவுடன் இணைந்துள்ளதால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் மாநில துணை தலைவரும்,  நடிகருமான ரஞ்சித் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது , அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக தெரிவித்தார்.  இதுகுறித்து அவர் பேசுகையில், 4 பேருக்கு கூஜா தூக்கிக் கொண்டு வாழ முடியாது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் மக்களை பாமக ஏமாற்றும். இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றி விட்டது என குற்றம் சாட்டினார். 

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான், பாமக கட்சியில் சேர்ந்ததாகவும், ஒரு நொடி பொழுதில் எனது கனவு தற்போது தகர்ந்து விட்டதாகவும். இதனால் தன்னுடைய பதவியில் இருந்து விளக்கிக் கொள்ள  செய்தியாளர்களை சந்தித்ததாக தெரிவித்தார்.

பதவி மற்றும் இன்றி, அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் விலகி கொள்வதாகவும். 8 வழிச் சாலைக்காக  மக்களை சந்தித்த போது தங்கள் மீது வழக்கு போட்டார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதை ஒரு நொடி நினைத்து பார்த்தார்களா.? எப்படி கூட்டணி அமைக்க முடிந்தது என ஆதங்கத்தை அனைவர் மத்தியிலும் கொட்டி தீர்த்தார் நடிகர் ரஞ்சித். 

சொல்ல முடியாத வார்த்தைகளால் கடந்த வாரம் அதிமுகவை பேசி விட்டு, எப்படி அவர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள். என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று நம்பி வந்த இளைஞர்களின் வாழ்க்கையில் மண் அள்ளி போட்டுள்ளார் அன்புமணி என்று கூறினார். அதே போல் குடிக்கு எதிராக போராடி விட்டு இப்படி ஒரு  கூட்டணியில் இணைத்துள்ளார் அன்புமணி என்று விளாசினார்.