குடியுரிமை திருத்த சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறார்கள் என்று தெரிவதற்கு முன்பே பலவிதமான கருத்துகளை உருவாக்கி மக்களிடையே பதற்றங்களை ஏற்படுத்துவது நல்ல விளைவுகளை உண்டாக்காது என்று நடிகர் ராஜ் கிரண் தெரிவித்துள்ளார்.


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். நாடு முழுவதுமே இஸ்லாமியர்கள் திரண்டு நடத்தும் போராட்டங்கள் கூர்மையாகிவருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தைக் குறிப்பிடமால் நடிகர் ராஜ் கிரண் விமர்சித்துவந்தார். இந்நிலையில் குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு தொடர்பாக ராஜ் கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவருடைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

 
அதில், “இந்திய குடியுரிமை சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு. இந்த இரண்டும் உலகின் எல்லா தேசங்களின் பாதுகாப்புக்கும், அவசியமானவை. நம் தேசத்துக்கும் நிச்சயமாக தேவை. இவைகளில் செய்யப்படும் திருத்தங்களும், மாறுதல்களும் பரிசீலிக்கப்பட வேண்டியவை. சட்டங்களை செயல்படுத்த வேண்டிய ஆட்சியாளர்கள், அந்தப் பரிசீலனைகளை முழுமையாக செய்து முடித்து, எப்படி அதை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று தெளிவான பிறகு, அதில் நமக்கு ஐயங்கள் இருந்தால், நம்மால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நம் கருத்துக்களை பதிய வைக்கலாம்.


நம் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையென்றால், ஒவ்வொரு குடிமகனுக்கும் உச்ச நீதிமன்றத்தை அணுகி நியாயம் கேட்க உரிமை இருக்கிறது. இது தான் சட்டப்பூர்வமான வழி. இதைத்தவிர்த்து, எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறார்கள் என்று தெரிவதற்கு முன்பே பலவிதமான கருத்துக்களை உருவாக்கி மக்களிடையே பதற்றங்களை ஏற்படுத்துவதென்பது நல்ல விளைவுகளை உண்டாக்காது என்பது என் தாழ்மையான கருத்து. பதறிய காரியம் சிதறும் என்பது பழமொழி. எதிலும் நிதானம் அவசியம். பொறுமையைவிடச்சிறந்தது எதுவுமில்லை. நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.” என்று ராஜ் கிரண் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ராஜ் கிரண் தெரிவித்துவந்த கருத்துகளுக்கு மாறாக ராஜ் கிரண் கருத்து தெரிவித்திருப்பதால், அதை எதிர்த்து பலரும் எதிர்க்கருத்துகளை தெரிவித்துவருகிறார்கள். அதேபோல ராஜ் கிரணை ஆதரித்தும் பலர் கருத்திட்டுவருகிறார்கள்.