இமயமலைக்கு சென்று வந்தது மனதிற்கு புத்துணர்ச்சியாக உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த 20 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். இதனை அடுத்து, தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். 

அவ்வப்போது அரசியல் குறித்து தனது கருத்துக்களையும் கூறி வருகிறார். விரைவில் அரசியல் கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று கட்சியின் பெயர், கொடி அறிமுக செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில்தான், கடந்த 10 ஆம் தேதி அன்று ஆன்மீக பயணமாக ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். ரிஷிகேஷ் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள ஆன்மீக தலங்களில் வழிபாடு நடத்தினார். அங்குள்ள ஆன்மீக குருக்களையும் சந்தித்து பேசி வந்தார்.

இந்த நிலையில் தனது ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். தனது ஆன்மீக பயணத்தை 10 நாட்களில் முடித்துக் கொண்ட ரஜினி இன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கினார். அங்கிருந்து அவர் போயஸ் கார்டன் புறப்பட்டுச் சென்றார்.

போயஸ்கார்டன் சென்ற ரஜினி, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இமயமைலைக்குச் சென்று வந்தது மனதிற்கு புத்துணர்ச்சியாக உள்ளது என்றார். பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம் என்று கூறிய அவர், பெரியார் சிலைகளை மாநில அரசு பாதுகாக்கும் என்று தான் நம்புவதாக கூறினார். சினிமா துறையில் வேலை நிறுத்தம் பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், வேலை நிறுத்தம் செய்யக் கூடாது என்பதை நான் எப்போது சொல்வேன் என்று அப்போது நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

ரத யாத்திரை என்பது மத கலவரத்துக்கு வழி வகுத்துவிடக் கூடாது என்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

உங்கள் பின்னால் பாஜக உள்ளதாக கூறப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, கடவுளும் மக்களுமே என் பின்னால் உள்ளனர் என்றார் ரஜினி.