வரும் டிசம்பரில் கட்சி தொடங்குகிறீர்கள் என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் சொல்லாமல் தவிர்த்திருப்பது. அவர் கட்சி தொடங்கும்  மனநிலையில் உள்ளாரா இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மும்பையில் நடைபெற்று வரும் தர்பார் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நேற்று இரவு சென்னை விமான நிலையம் திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகை நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் தர்பார் திரைப்படம்  மும்பையில் உருவாகி வருகிறது.  இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  படம் ரிலீஸ் ஆனவுடன், டிசம்பர் மாதம் கட்சியை அறிவித்து நடிகர் ரஜினிகாந்த் முழு அரசியலில் குதிப்பார் என்று தகவல் பரவிவருகிறது.  ஏற்கனவே  சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியை அறிவித்து அதில் போட்டியிடுவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் கட்சிகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நிறுவனத்தை நடத்திவரும் பிரசாந்த் கிஷோர்வுடன் ரகசியமாக  ரஜினி சந்தித்ததாக தகவல் பரவியது. 

எனவே அவர் கட்சி தொடங்க ஆயத்தமாகி விட்டார் என கூறப்பட்டதுடன், அவரது ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். இந்நிலையில் நேற்றிரவு மும்பையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தர்பார் திரைப்படம்  நன்றாக வந்துள்ளதாக கூறினார்,  அதைத்தொடர்ந்து,   பிரசாந்த் கிஷோரை சந்தித்தது உண்மையா என்றும், வரும்  டிசம்பர் மாதத்தில் கட்சி தொடங்கப் போகிறீர்களா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  ஆனால் இந்த இரு கேள்விகளுக்கும் பதில் அளிக்க மறுத்த ரஜினி, அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இடையில் உள்ள நிலையில்,  கட்சி தொடங்குவது குறித்து ரஜினி இன்னும் தெளிவான முடிவுக்கு வரவில்லையோ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.