Actor Rajinikanth and Kamal Haasan will be present at the opening ceremony of Shivaji Manimandha actor Vishal said.

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் பங்கேற்பார்கள் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்காக அடையார் சத்யா ஸ்டூடியோ எதிரே ஒதுக்கி கொடுத்தது தமிழக அரசு. 

ஆனால் நடிகர் சங்கம் காலம் தாழ்த்தவே தமிழக அரசே முன்வந்து சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. 

அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் நீண்ட நாட்களாக திறப்பு விழா குறித்து தமிழக அரசு வாய்திறக்காமல் இருந்தது. 

இதைதொடர்ந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அக்டோபர் 1 ஆம் தேதி திறக்கப்படும் எனவும், காலை 1௦.3௦ மணிக்கு அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கடம்பூர் ராஜூ மணிமண்டபத்தை திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு, தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். 

அதில், தனது அப்பாவுக்கு மணி மண்டபம் கட்டுவது, புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் கனவு திட்டம் எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் இந்த மணிமண்டபத்தை அவர் திறந்திருப்பார் எனவும் தெரிவித்திருந்தார். 

ஒரு மிகப்பெரிய நடிகரின் மணிமண்டபத் திறப்பு விழாவில் முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் கலந்து கொள்ளாதது எங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், இந்த விழாவில் முதலமைச்சர் உள்பட அனைத்து பிரமுகர்களும் கலந்து கொள்ளும் வகையில் மணிமண்டப திறப்பு விழாவை நடத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும் எனவும், என கடிதத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். 

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மணிமண்டபத்தை திறந்து வைப்பார் என தெரிவித்திருந்தார். அதற்கு பிரபு வரவேற்பு தெரிவித்தார். 

இந்நிலையில், சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. அரசு செய்தித்துறை அதிகாரிகள் ரஜினி இல்லத்தில் அழைப்பிதழை வழங்கினார்கள். கமலஹாசன் இல்லத்திலும் விழா அழைப்பிதழை அரசு அதிகாரிகள் அளித்தனர்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்.