நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்து 3 ஆண்டுகள் ஆக உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், கட்சித் தொடங்க வலியுறுத்தி அவருடைய ரசிகர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டிவருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில்,  “ரஜினி முதல்வர் வேட்பாளராக நிற்பதை ஆதரிப்பேனா அல்லது அவர் கைகாட்டும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பேனா என்னை என்னை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள். நான் ஒன்றை தெளிவுபடுத்த இங்கே விரும்புகிறேன். ரஜினி முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. ஆனால், லீலா பேலஸில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக ரஜினி அறிவித்தபோது, அதை நான் ஆதரித்தேன்.
அவருடைய முடிவுக்கு எதிராக எதையும் சொல்லக் கூடாது என்று அப்போது நான் நினைத்தேன். ஆனால், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னால் மட்டுமல்ல, ரஜினி ரசிகர்கள் யாராலும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த வாரம் ரஜினியுடன் பேச இருக்கிறேன். அப்போது அவருடைய முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் நான் வலியுறுத்துவேன்.


முதல்வர் வேட்பாளராக ரஜினி நின்றால், நான் அவருக்காக சேவை செய்ய தயாராக இருக்கிறேன். ஒரு வேளை ரஜினி ஒப்புக்கொள்ளாவிட்டால், என்னால் முடிந்த அளவுக்கு அவரை ஒப்புக்கொள்ளவைக்க முயற்சிப்பேன். நீங்க வந்தா நாங்க வாரோம்... இப்போ இல்லன்னா எப்போ? நவம்பர்” என்று அதில் ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.