மே 23 அன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறு என்பதை மக்கள் நிரூபிப்பார்கள் என்று நடிகரும் மத்திய பெங்களூரு தொகுதி சுயேட்சை வேட்பாளருமான பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
 நாடாளுமன்றத் தேர்தல் நேற்றோரு முடிந்துவிட்டது. மே 23 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. தேர்தல் நிறைவு பெற்றதையடுத்து வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று மாலை வெளியாகின. இந்தக் கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தோல்வியடையும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளை எதிர்க்கட்சிகள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டன. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை நடிகர் பிரகாஷ் ராஜ் குறை கூறியுள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இரவு கண்ட கனவு மீண்டும் வரும் என்று சிலர் பகல் கனவு காண்பார்கள்.  நாட்டு மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மே 23 அன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறு என்பதை மக்கள் நிரூபிப்பார்கள். அதுவரை அவர்கள் பாடிக் கொண்டாடட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.


பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் பிரகாஷ் ராஜ், இந்தத் தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.