தமிழகத்தில் உள்ள  120 முகாம்களில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் உயர் கல்வியை கருத்தில்கொண்டு புதிய கல்லூரி ஒன்றை தொடங்கவுள்ளதாக நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். இந்த கல்லூரியின் அடிக்கல் நாட்டுவிழாவில் இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் கலந்து கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில்  120 க்கும் மேற்பட்ட  இடங்களில் இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்கள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த முகாம்களில் உள்ள மாணவர்கள் பிளஸ் 2 வரை ஈசியாக படித்துவிடுகின்றனர். ஆனால் அதற்கு மேல் உயர்கல்வி பயில்வதில் அவர்களுக்கு பெரும் சிக்கல் இருந்து வருகிறது.

இதனைக் கருத்தில்கொண்டு தமிழகத்தில் உள்ள இலங்கை மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் பொருட்டு புதிய கல்லூரி  ஒன்றைத் தொடங்க நடிகர் கருணாஸ்  முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கேஷ்வரனை அழைப்பதற்காக நடிகர் கருணாஸ் இலங்கை யாழ்பாணம் சென்றுள்ளார்.

அங்கு முதலமைச்சர் விக்னேஷ்வரனைச்  சந்தித்த கருணாஸ் தமிழகம் வாழ் இலங்கை மாணவர்களுக்காக தான் தொடங்கவுள்ள புதிய கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். இதற்கு முதலமைச்சர் விக்னேஷ்வரன் சம்மத்ம் தெரிவித்துள்ளதாக செய்தியாளர்களிடம் கருணாஸ் தெரிவித்தார்.

நடிகர் கருணாசின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.