அரசியலில் இருக்க நினைத்தால் தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று நடிகர்கள் ரஜினி, கமலுக்கு சிரஞ்சீவி அறிவுரை வழங்கியிருக்கிறார்.  
 நடிகர் சிரஞ்சீவி நீண்ட நாட்கள் கழித்து ‘சைரா’ என்ற வரலாற்றுப் படத்தில் படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் புரொமேஷன் பணியில் தற்போது சிரஞ்சீவி ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தமிழ் வார இதழ் ஒன்றிலும் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அரசியலுக்கு வந்துவிட்ட கமலுக்கும் அரசியலில் களம் இறங்க உள்ள ரஜினிக்கும் அறிவுரைகளை வாரி வழங்கியிருக்கிறார் அனுபவஸ்தரான நடிகர் சிரஞ்சீவி.
தன்னுடைய அரசியல் பற்றிய கேள்விக்கு, “தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன்னாக இருந்தேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்து வீழ்ச்சி அடைந்துவிட்டேன். இன்று அரசியல் என்பதுதே பணம் என்றாகி விட்டது. கோடிக்கணக்கான பணத்தைப் பயன்படுத்தி என்னுடைய சொந்த தொகுதியிலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன். அண்மையில் நடந்துமுடிந்த தேர்தலில் எனது சகோதரர் பவன் கல்யாணுக்கும் அதேதான் நடந்தது.


நீங்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்களை எதிர்கொள்ள வேண்டிவரும். ரஜினியும் கமலும் தொடர்ந்து அரசியலிலிருந்து மக்களுக்காக உழைக்க வேண்டும் எனத் தீர்மானித்து விட்டால், எல்லா சவால்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவர்கள் வித்தியாசமான அணுகுமுறையால் அவற்றை கையாள்வார்கள் என நம்புகிறேன்.  நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமல் சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால், துரதிஷ்டவசமாக வெற்றி கிடைக்கவில்லை" என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
 முதல்வர் கனவோடு 2008-ல் பிரஜா ராஜ்யம் கட்சியை  நடிகர்  சிரஞ்சீவி தொடங்கினார். 2009- நடந்த தேர்தலில், 20 சதவீத வாக்குகளைப் பெற்ற சிரஞ்சீவி, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றார். பலேகால், திருப்பதி என இரு தொகுதிகளில் போட்டியிட்ட சிரஞ்சீவி, சொந்த ஊரான பலேகால் தொகுதியில் தோல்வியடைந்தார். திருப்பதி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். தேர்தலுக்கு பிறகு அடுத்த சில ஆண்டுகளில் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து மத்திய சுற்றுலா துறை அமைச்சரானார். 2014-ம் ஆண்டுடோடு அரசியலிலிருந்து விலகிவிட்டார் சிரஞ்சீவி.