தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளோடு சந்திப்பு நடத்தி நோய்த்தொற்றை உறுதி செய்யும் பரிசோதனைகளை எடுக்க வழிமுறைகளையும், அதிகாரமும் கொடுத்தால் வைரஸ் தொற்று வேகமாகக் கண்டறியப்படுவதோடு, வைரஸ் தொற்று உள்ளதாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் ஒரே இடத்தில் கூடுவதையும் தவிர்க்கலாம்.


H1N1 பரிசோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட சோதனைக் கூடங்களுக்கும் அந்தப் பணியைச் செய்திட அங்கீகாரமும், வழிமுறைகளையும் வழங்கினால் மட்டுமே வைரஸ் தொற்று கண்காணிப்பு சீரிய முறையில் தாமதமின்றி நடந்து, நோய் பரவுதலைத் தடுக்க முடியும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 114 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை 2 பேர் உயிரிழந்துள்னர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை, மால்கள், திரையரங்குகள் உள்பட மக்கள் கூடுமிடங்களுக்கு மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னேற்பாடுகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
அதில், “சுமார் 8 வாரங்களாக உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் SARS - CoV2 (Covid-19) வைரஸ் கடந்த 3 வாரங்களாக இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 105 தான் என்றாலும், அடுத்து வரவிருக்கும் 2 வாரங்கள் மிக முக்கியமானது. ஏனென்றால் சீனா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின் என பாதிப்படைந்த எல்லா நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3-வது வாரத்திலிருந்து 4-வது மற்றும் 5-வது வாரத்தில் ஆறிலிருந்து - பத்து மடங்காக அதிகரித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இது இந்தியாவிலும் நடக்காமல் தடுக்க முடியும்.