கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.
இதற்கிடையில் நட்சத்திர பேச்சாளரான நடிகை விந்தியா, அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், அவர் சினிமா துறையிலும் நடிக்க போவதில்லை என கூறியிருந்தார்.

இதைதொடர்ந்து நடிகர் ஆனந்த்ராஜ், அரசியலில் இருந்து விலகினார். இதனால், அவருக்கு, சிலர் செல்போனில் மெசேஜாவும், வீட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கமிஷனர் அலுவலகத்திலும் அவர் புகார் செய்தார். நடிகர் ஆனந்த்ராஜ், அதிமுகவில் இருந்து விலகிய பின்னர், எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என கூறினார்.

இதற்கிடையில், சசிகலா அதிமுக பொது செயலாளராக பதவியேற்றதை சில அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என அதிமுக தொண்டர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையொட்டி தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களிடம், நான் விரைவில் அரசியலுக்கு வருவேன் என தீபா உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஆனந்த்ராஜ் வீட்டுக்கு, தீபா பேரவை நிர்வாகிகள் சென்றனர். அங்கு அவரை சந்தித்து பேசியபோது, தீபா பேரவைக்கு ஆதரவு தரும்படி அழைத்து விடுத்துள்ளனர். மேலும், தீபாவின் புதிய கட்சியில் சேர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், நடிகர் ஆனந்த்ராஜ், அரசியலுக்கு வருவது பற்றியோ, தீபாவின் புதிய கட்சியில் இணைவது பற்றியோ எந்த பதிலும் கூறவில்லை. விரைவில் நல்ல முடிவை சொல்கிறேன் என்ற வார்த்தையை மட்டும் கூறியதாக தெரிகிறது.
