பாஜகவின் வேல்யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கொரோனா அதிகமாக பரவும் என்பதால் இதை கைவிட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கும் வேல்யாத்திரை டிசம்பர் 6-ம் தேதி , திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடுகையில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது. மேலும் கொரோனாவுக்கான 2, 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் வேல் யாத்திரையை தடுப்பது சரியல்ல என பாஜக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

மேலும், கொரோனா தொற்று குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. வேல் யாத்திரையின்போது குறிப்பிட்ட எந்த பகுதியிலும் தங்கப்போவதில்லை. குறிப்பிட்டு எந்த பகுதியையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கவில்லை என்றும்  பாஜக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வேல் யாத்திரைக்கு தடை கோரிய வழக்குகளை முடித்து வைத்த நீதிமன்றம், வேல் யாத்திரைக்கு அனுமதி கோரும் பாஜக மனு மீது தமிழக அரசு எடுக்கும் முடிவை பொறுத்து வழக்குகளை தொடரலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். 

இந்நிலையில், ஓட்டேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்;- மக்கள் நலனை கருத்தில் கொண்டே பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 மற்றம் 3ம் அலைகள் வர வாய்ப்புள்ளது. கொரோனா நிலையை கருதி உயர்நீதிமன்றத்தில் தமிழகம் வாதிட்டதற்கு பலன் கிடைத்துள்ளது. 

பாஜக மட்டுமல்ல அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். வேல் யாத்திரையை பாஜக கைவிட வேண்டும். சட்டத்தை மீறினால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 7 பேர் விடுதலையில் உச்சநீதிமன்ற கருத்தின்படி ஆளுநர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.