மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்காத அதிகாரிகள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 14-ந் தேதி முதல் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வரத்தொடங்கி படிப்படியாக அதிகரித்தது. அதிகபட்சமாக 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து நேற்று 116 அடியை எட்டியது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 20 ஆயிரம் கன அடி தண்ணர் திறந்துவிடப்படுகிறது. தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 116.98 அடியாக உயர்ந்தது. பிற்பகல் 117 அடியை எட்டியது.

கர்நாடகாவில் பெய்து வரும் பெருமழை காரணமாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. கடந்த 19ஆம் தேதி அணையின் நீர் மட்டம் 110 அடியாக இருந்ததையடுத்து டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்தத் தண்ணீர் வரும் 27 ஆம் தேதி கடைமடை பகுதிக்கு சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, சம்பா நெல் சாகுபடி இந்த ஆண்டு முழு அளவில் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே, விவசாயிகளுக்குத் தேவையான விதை நெல், உரம், இடுபொருட்கள், பயிர்க்கடன் ஆகியவை விரைந்து கிடைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “முறையாக பயிர்க்கடனை வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

“விவசாயிகளுக்குக் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் பயிர்க் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக விலைவாசி உயர்வைத் தடுக்க கூட்டுறவுத் துறைக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் "என தெரிவித்துள்ளார்.