நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ‘இந்தியன்’ பட நாயகி ஊர்மிளா காங்கிரஸ் கட்சிக்கு குட்பை சொல்லிவிட்டார்.
1990-களில் இந்தி பட உலகை கலக்கிய ஊர்மிளா, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த அடுத்த சில நாட்களிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சீட்டு கொடுத்தது. வடக்கு மும்பையில் காங்கிரஸ்காரர்கள் யாரும் போட்டியிட முன் வராத காரணத்தாலேயே, நடிகை ஊர்மிளாவை கட்சிக்குள் கொண்டு வந்ததாகவும் பேசப்பட்டது.


தேர்தலில் போட்டியிட்ட ஊர்மிளா, 2,41,431 வாக்குகள் பெற்றார். பாஜக - சிவசேனா கூட்டணி வேட்பாளரிடம் ஊர்மிளா தோல்வியடைந்தார். தேர்தலுக்கு பிறகு அமைதியாகிவிட்ட ஊர்மிளாவை, விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை மும்பையில் ஒதுக்கவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார் ஊர்மிளா.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஊர்மிளா, “காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் விலகுகிறேன். மும்பையில் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கட்சியை வளர்க்க ஆர்வமே காட்டவில்லை. அதற்கான முயற்சியும் இல்லை. கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு கோஷ்டி சண்டை போட்டுக்கொள்கின்றனர். அதில் என் பெயரையும் இழுத்துவிடுகிறார்கள். இதற்கு எனது மனம் இடம்கொடுக்கவில்லை. கட்சி தலைமைக்கு எழுதும் கடிதங்களை மீடியாவுக்கு கசியவிடுகின்றனர். இது அப்பட்டமான ஒரு துரோக செயல். கட்சியை வளர்க்க யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் காங்கிரஸிலிருந்து விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள நடிகை ஊர்மிளா, பாஜகவில் சேருவார் என்று பேச்சு அடிபடுகிறது.