புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம்! அப்படி சொல்வதை விட ‘ரஜினியின் நெருங்கிய நண்பர் ஏ.சி.எஸ்!’ என்று சொன்னால் அந்த மனிதர் ஏக குஷியாகிவிடுவார். அது என்னமோ தெரியலை, என்ன மாயமோ தெரியல இருவருக்கும் அப்படியொரு நட்பு! 

இவர் நடத்தும் நிகழ்வுகளுக்காக உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் ஓடி வந்து செம்ம ஸ்பெஷலாக கலந்து கொள்வதோடு, செமத்தியாக மீடியாவுக்கு தீனி போடும்படி பேசவும் செய்வார் ரஜினி. 

அந்த ஏ.சி.எஸ். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ரஜினிகாந்தை வானத்துக்கு பூமிக்குமாக புகழ்ந்து கொண்டாடுவார். ரஜினி குறித்த இவரது வர்ணனையை ’அய்யோ அய்யோ! உங்களோடு ஒரே நகைச்சுவையாய் இருக்கிறது போங்கள்!’ என்று எதிராளி கலாய்த்தாலும் கூட ஏ.சி.எஸ்ஸுக்கு கூச்சமே வராது. 

அப்பேர்ப்பட்டவர் இப்போது சூப்பர் ஸ்டாரின் ஜகதல பிரதாபங்களாக எடுத்து விட்டிருக்கும் தகவல்களில் சில துணுக்குகள் இதோ...

*இரட்டை வேடம் போடும் வேலையெல்லாம் ரஜினிக்கு என்றைக்குமே இருந்ததில்லை. எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் அவரை புகழ்ந்ததும், கருணாநிதி நினைவேந்தலில் அவரைப் புகழ்ந்ததும் இரு பெரும் தலைவர்களுக்கும் ரஜினி செலுத்திய அர்ச்சனை அவ்வளவே. இதை இரண்டு பக்கமும் கோல் போடுகிறார் என்று கேவலப்படுத்த நினைப்பது அபத்தம். 

*ராஜீவ் மரணத்துக்குப் பின் பிரதமரானார் நரசிம்மராவ். அப்போது அவரை ரஜினி சந்தித்தபோது ராவ்வே ரஜினியை அரசியலுக்கு அழைத்தார். ஆனால் மறுத்துவிட்டார் சூப்பர் ஸ்டார். 

*ஆனால் இப்போது தானாகவே விரும்பி அரசியலுக்கு வருகிறார். இது ஏன்? என்று நான் கேட்டபோது ’எனக்கு வாழ்வளித்த தமிழக மக்களுக்கு நல்லாட்சி தரவேண்டும்.’ என்கிறார். 

*சட்டமன்ற தேர்தல் இல்ல, நாடாளுமன்ற தேர்தலிலேயே கூட போட்டி போடுற அளவுக்கு ரஜினியோட கட்சி ரெடி. ஆனா போட்டு
போடுவாரான்னு ரஜினிதான் தெரிவிக்கணும். 

*எம்.ஜி.ஆரின் பெரும்பான்மையான பண்புகளில் எழுபது சதவிகிதம் ரஜினியிடம் இருக்கிறது. அரை நூற்றாண்டு அரசியல் அனுபவம் பெற்ற தலைவர்களை விட அதிக அரசியல் ஞானம் ரஜினியிடம் உண்டு. அவரை அவ்ளோ லேசா யாரும் ஏமாற்றிவிட முடியாது. 

*ரஜினி புதிய கட்சியை துவக்கினால், ஸ்டாலினுக்கும் அவருக்கும்தான் போட்டியே இருக்கும். மற்றவர்கள் இவர்களுக்குப் பின் தான். 

*தேசிய அரசியல் விஷயங்களை விரல் நுனியில்  வைத்திருக்கிறார். சினிமாவை போல் அரசியலிலும் வேறு யாரும் அவரை ஆளுமை செய்துவிட முடியாது.  - என்று அள்ளிக் கொட்டியிருக்கிறார் ஏ.சி.எஸ். தான் சொன்னதை அவரே ஒரு முறை வாசிக்கும் நிலை வந்தால் ‘கொஞ்சம் ஓவராத்தான் இசைச்சுடோமோ?’ என்று தோன்றலாம்.  நீங்க சிரிக்காதீங்க ப்ளீஸ்!