மக்களவை தேர்தலில் உறுதியான நிலைப்பாடு எடுக்காத சரத்குமார் கூட்டணி முடிந்த பிறகு அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட முடிவெடுத்துள்ள நிலையில் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். 


மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று சரத்குமார் அறிவித்தார். ஆனால் வேட்பாளர் பட்டியலை இதுவரை அவர் வெளியிடவில்லை. திடீரென அதிமுகவை அவர் ஆதரிக்க உள்ளதாக கூறப்பட்டுகிறது. சரத்குமாரின் நடவடிக்கை கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் பலர் அவரது நடவடிக்கைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதனால் அவர்களை சரத்குமார் அதிரடியாக நீக்கி வருவது சமகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி நீக்கப்பட்ட மாவட்ட செயலாளர் கிச்சா ரமேஷ், ‘நான் நடிகர் சங்கத்தில் இருந்தே சரத்குமாருடன் பயணிக்கிறேன். விஷால் அணியை எதிர்த்து ஒவ்வொருத்தர் காலில் விழுந்து சரத்குமாருக்காக ஓட்டு கேட்டோம். தொடர்ந்து நான் பேனர், கட்அவுட் வைத்தது மாநில பொதுச் செயலாளரான சேவியருக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் நான் நடிகன். நான் வளர்ந்து வருவது அவருக்கு பிடிக்கவில்லை.

நேற்று முன்தினம் சரத்குமாரிடம் நான் பேசும் போது, நாம் தனித்து தான் போட்டியிடுகிறோம் என்று கூறினார். ஆனால் இன்று வரை அவர் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. மாநில நிர்வாகிகள் சரத்குமாரை திசை திருப்ப முயல்கின்றனர். சரத்குமாரை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர். அது எங்களுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக சேவியர் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு தான் மாவட்ட பொறுப்பு போடுகிறார்கள். இது சரத்குமாருக்கு தெரியவில்லை. மாநில நிர்வாகிகள் பணத்தின் மீது தான் குறியாக இருக்கிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் 35 மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே தான் நாங்கள் இந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை. இதை கேள்விப்பட்டு சரத்குமார் எங்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டு வருகிறார். 

தனித்து நிற்பதாக கூறிவிட்டு இப்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள். இந்த விஷயத்தில் சரத்குமார் தனித்து முடிவெடுக்க வேண்டும். அவர் எங்களை அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயார். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கிரிபாபு, தக்காளி முருகேசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.