accountant general sinha criticize a raja
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரிய அளவில் சதி நடந்துள்ளது என 2ஜி ஊழல் தணிக்கையின் பின்னணியில் இருந்த முக்கிய அதிகாரியான ஆர்.பி.சின்ஹா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ.ராசா இருந்தார். அப்போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி வரையில் இழப்பீடு ஏற்பட்டதாக அப்போதைய தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய் அறிக்கை அளித்தார்.
இதையடுத்து 2ஜி ஊழல் என்பது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்தது. கடந்த 7 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் விசாரணையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2ஜி வழக்கை ஆரம்பத்தில் விசாரித்தது போல் சிபிஐ விசாரிக்கவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களுடன் நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது. சிபிஐ இந்த வழக்கை அலட்சியமாக கையாண்டது என கூறி, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதையடுத்து 2ஜி வழக்கு தொடர்பாக ஆ.ராசா எழுதிய புத்தகம் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில், 2ஜி ஒதுக்கீடில் முறைகேடு நடந்ததாக அறிக்கை அளித்த அப்போதைய தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராயை காண்டிராக்ட் கில்லர் என ஆ.ராசா விமர்சித்திருந்தார்.
ஆ.ராசாவின் கருத்துக்கு முன்னாள் தணிக்கை அதிகாரி ஆர்.பி.சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர், 2ஜி ஊழல் தணிக்கையின் பின்னணியில் பணியாற்றிய தணிக்கை அதிகாரி ஆவார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், கேள்விக்குரிய நீதிமன்ற உத்தரவை வைத்துக்கொண்டு 2ஜி ஊழல் என்ற ஒன்றே இல்லை என்று ஆ.ராசா கூறிவருகிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டது. மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மிகப்பெரிய சதி நடைபெற்றதற்கான போதுமான, அல்லது போதுமானதற்கும் கூடுதலான ஆதாரம் உள்ளன.
எந்த ஒரு வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எப்படி நடந்தது என்பதை தணிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. மிகவும் நியாயமற்ற, பாரபட்சமான முறையில் ஒதுக்கீடு நடைபெற்றது. ஒதுக்கீடு செய்வது தொடர்பான மரபுகள், விதிகள், நடைமுறைகள் எதுவுமே பின்பற்றப்படவில்லை. அரசுக்கு ஏற்பட்ட உத்தேச நஷ்டமாக தணிக்கை அறிக்கை கூறியிருப்பது ரூ.67,000 கோடி முதல் ரூ.1.76 லட்சம் கோடியாகும்.
நாங்கள் கண்டுபிடித்ததற்கு எதிராக நம்பத்தகுந்த வாதங்களை யாரும் முன்வைக்கவில்லை. இந்த வழக்கை விசாரிப்பதில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அலட்சியமாக நடந்துகொண்டதாக சிபிஐ நீதிமன்றமே கூறியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் கூறியது, ஆ.ராசாவுக்கான நற்சான்றிதழ் அல்ல என ஆதங்கத்துடன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
