வேலூரில் திமுக  50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்த்து இருந்தவர்களின் வயிற்றில் புளியை கரைத்து விட்டார் ஏ.சி.சண்முகம்.

 

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று இருந்தாலும் பயங்கர டஃப் கொடுத்து விட்டார் ஏ.சி,சண்முகம். சொப்ப ஓட்டுக்களில் வென்றாலும் இந்த வாக்கு எண்ணிக்கை சதவிகிதம் திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இவ்வளவு குறைவான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதற்கு காரணம் வேலூர் திமுகவில் நிலவிய உட்கட்சி பூசலே காரணம் எனக் கூறப்படுகிறது. 

கதிர் ஆனந்துக்கு வேலூர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டபோதே சலசலப்பு எழுந்தது. முதல் முறை தேர்தலில் நின்றபோதே திமுக நிர்வாகிகள் விரக்தி நிலைக்கு சென்றனர். ஆனால் துரைமுருகன் தனது செல்வாக்கை பயன்படுத்தி மகனுக்கு வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். இது குறித்து அப்போதே ஸ்டாலினுக்கு வேலூர் திமுக நிர்வாகிகள் சிலர் எச்சரிக்கை கடிதமும் அனுப்பி இருந்தனர். 

கதிர் ஆனந்த் போட்டியிட்டால் திமுக தொண்டர்கள் பலரும் பணியாற்ற மாட்டார்கள் என எச்சரித்து இருந்தனர். அதையும் மீறியே கதிர் ஆனந்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முன்பு தொண்டர்கள் எச்சரித்ததை இப்போது ஸ்டாலின் உணர்ந்துள்ளார். அதன் பிரதி பலிப்பே வேலூரில் கதிர் ஆனந்த் இழுபறி நிலையில் வெற்றி பெற்றுள்ளார். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனக் கருதப்பட்ட நிலையில் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளது திமுகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.