50 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்பட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார் முன்கள பணியாளர்களுடன் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க முன்னுரிமை கொடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும் பிரிட்டனில் உருவாகியுள்ள உருமாறிய வைரஸ் மீண்டும் ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை தொடர்ந்து தாக்க கூடும் என்ற அச்சம் உள்ளதால் தடுப்பூசி தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. முன்கூட்டியே வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது ஒவ்வொரு மருந்தாக ஒன்றன்பின் ஒன்றாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்தவண்ணம் உள்ளன. 

இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும்  அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மத்திய  அரசால் குறைந்த விலையில் இம் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இன்னும் 12 அல்லது 14 நாட்களுக்குள் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகளை உடனே அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்து மக்களுக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கி இருக்கிறது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு எந்த முறையில் வழங்கப்படும் என்ற தகவலை, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார். அதாவது ஒவ்வொரு நகரத்திற்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் 12 மொழிகளில் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு தகவல்கள் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும். அதேபோல் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் முன்கூட்டியே தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதை இப்போது பதிவு செய்ய முடியாது. தடுப்பூசி போடும் பணி துவங்கியதும் பெயர்களை பதிவு செய்வதற்கான வசதிகள்  செய்யப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் நிச்சயம் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும். இதன் மூலமாக ஒவ்வொரு நபருக்கும் க்யூ ஆர் கோடு அடங்கிய அடையாளச் சான்றிதழ் வழங்கப்படும். அதாவது தனி அடையாளங்கள்  உருவாக்கப்படும். 

பின்னர் இதை ஆதாரமாக வைத்து எப்போது வேண்டுமானாலும் அவர்கள் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள முடியும். மேலும் அவர்களுடைய விவரங்களும்  இதை மையமாகக் கொண்டு கண்காணிக்கப்படும். தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள படி சுகாதார ஊழியர்கள் முன் களப்பணியாளர்கள். தவிர்த்து 50 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கும், அதே போல் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்பட  உள்ளது.  அதே போல் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முன்கூட்டியே தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.