கேரளாவில் வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை வாலிபர் ஒருவர் கன்னத்தில் முத்தமிட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு தொகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரு வாரங்களுக்கு முன்பு பார்வையிட்டு சென்றிருந்தார். தற்போது நிவாரணப் பணிகள் கேரளாவில் நடைபெற்றுவரும் நிலையில், ராகுல் வயநாடு தொகுதிக்கு மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் பார்வையிட்டார். 
வயநாட்டில் ராகுல் காரில் சென்றபோது ஓரிடத்தில் சாலையின் இரு புறமும் பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்களைப் பார்த்ததும் காரை நிறுத்த சொன்ன ராகுல், அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது ஆர்வமிகுதியில் ஒரு வாலிபர் காரை நெருங்கினார். காரில் அமர்ந்திருந்த ராகுலுடன் ஆர்வமுடன் கைகுலுக்கினார். யாரும் எதிர்பார்க்காத வேளையில் திடீரென ராகுல் காந்தியை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். இதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் திகைத்துபோனார்கள். உடனே அருகில் இருந்த அதிகாரிகளும் காங்கிரஸ் நிர்வாகிகளும் அந்த வாலிபரை வெளியே இழுத்தனர்.


ஆனால்,  ராகுல் காந்தி இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வழக்கம்போல் புன்னகை செய்தார். பின்னர் கூடியிருந்த பொதுமக்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு காரில் பயணத்தைத் தொடங்கினார். இந்தக் காணொலி காட்சி சமூக ஊடங்களில் பகிரப்பட்டு அதிகளவில் வைரலாகிவருகிறது.