“ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் வரும் போது உதயநிதியைச் சாதாரணமாக நினைத்தார்கள். ஆனால், இன்று ஒரு கல் செங்கல் வைத்து மத்திய அரசையே எதிர்த்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.”
தமிழக சட்டப்பேரவையில் ‘ஒரு கல் செங்கல்’ என்று உதயநிதியை பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ரைமிங்காகப் பேசி பாராட்டியிருக்கிறார்.
பாராட்டி பேசும் திமுக எம்.எல்.ஏ.க்கள்
தமிழக சட்டப்பேரவையின் தன்னை புகழ்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ.க்களுக்கும் அமைச்சர்களுக்கும் பல முறை முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லிவிட்டார். ஆனாலும், அவர்கள் கேட்பதில்லை. முதல்வரை மட்டுமல்ல, திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதியையும் சட்டப்பேரவையிலும் சட்டப்பேரவைக்கு வெளியேயும் புகழ்ந்து பேசுவதில் திமுக எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களும் சலிப்பதில்லை. அவரை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சர்கள் தொடங்கி எம்.எல்.ஏ.க்கள் வரை அனைவரும் பேசி வரும் நிலையில், நேற்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் பேசியது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பலராலும் பகிரப்பட்டது.

ஒரு கல் செங்கல்
பிரபாகரன் பேசியது இதுதான். “உதயநிதியின் உழைப்பால் ஒரு தொகுதி (சேப்பாக்கம்) பயன் பெறுவதோடு நின்று விடாக் கூடாது. தமிழ்நாடு முழுவதும் பயன் பெற வேண்டும். காலம் கனிந்துவிட்டது (அமைச்சராக). அதற்கு முதலமைச்சர் மனம் கனிய வேண்டும். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் வரும் போது உதயநிதியைச் சாதாரணமாக நினைத்தார்கள். ஆனால், இன்று ஒரு கல் செங்கல் வைத்து மத்திய அரசையே எதிர்த்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.” என்று பேசியிருக்கிறார் பிரபாகரன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டவில்லை என்பதைக் கூறும் விதமாக, செங்கல்லை தூக்கிக் காட்டினார் உதயநிதி.
