காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி..! இரண்டாவது ரயில் கோவையில் இருந்து புறப்பட்டது
காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம் மற்றும் கலாச்சார தொடர்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு துவங்கியுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான இரண்டாம் கட்ட ரயில் சேவை கோயம்புத்தூரில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்டு சென்றது.
காசிக்கு ரயில்
காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொன்மையான நாகரிக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக, ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’நிகழ்ச்சி, வாரணாசியில் நடைபெற்று வருகிறது. கடந்த 17ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி டிசம்பர் 16ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறுகிறது. வாரணாசியில் அறிஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணம் செய்ய உள்ளனர்.
ஆளுநர்களுக்கு யுஜிசி தலைவர் கடிதம்..! முதலமைச்சர்களை அவமதிக்கும் செயல்..! திருமாவளவன் ஆவேசம்
கோவையில் இருந்து இரண்டாவது ரயில்
முதல் ரயில் சேவையை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காசிக்கு செல்பவர்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதனையடுத்து பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதல் ரயிலில் பயணம் செய்தவர்கள் கலந்து கொண்டனர். இதன் இரண்டாம் கட்டமாக கோவையில் இருந்து ரயில் இன்று புறப்பட்டுள்ளது. முதற்கட்ட பயணத்தில் மாணவர்கள் குழுக்களாக பங்கேற்று இருந்த நிலையில், இந்த ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 83 பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் தங்களது பயணத்தை துவங்கினர்.
வழியனுப்பிய பாஜகவினர்
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை கோயம்புத்தூர் மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், மலர் தூவியும் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். காசி தமிழ்ச் சங்கமம் ரயில் சேவை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை துவங்கப்பட்டதையடுத்து ரயில்வே மற்றும் மாநகர காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படியுங்கள்
தனி தமிழ்நாடு கோரிக்கை..! திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- ஹெச்.ராஜா ஆவேசம்