கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்2 ஜி அலைக்கற்றை  ஒதுக்கீடு செய்ததில் ஊழல் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், வேறு வழக்கறிஞர்கள் வைத்துச் கொள்ளாமல் தானே வாதாடி அதில் இருந்து மீண்டு வந்தார்.

இதையடுத்து ஆ.ராசா கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.ஆனார். இதைத் தொடர்ந்து தற்போது மக்களவையில் தான் ஒரு சீனியர் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக நலன்களுக்கான பேசி வருகிறார்.

இன்று மக்களவையில் உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ஆ.ராசா, பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்பிரிவினருக்கு கடன் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கலாம். வேண்டுமெனில், கல்விக் கட்டணத்தையே கூட ரத்து செய்யலாம்.

ஆனால், அவர்களை 10 சதவீதம் இடஒதுக்கீட்டுக்குள் கொண்டு வருவது, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை மடைமாற்றுவதாகும் என காரசாமாக விவாதித்தார்.

இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு, மக்களவையை வழிநடத்தும் மாற்று சபாநாயகர் பொறுப்பையும் ஆ.ராசா ஏற்றுக் கொண்டார்.  3 முறைக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிப்பவர்களை அவையின் இறுதி நேரத்தில் மாற்று சபாநாயகராகச் செயல்படுமாறு கேட்டுக்கொள்வது வழக்கம். அதன்படி, கடந்த வாரத்தில் டி.ஆர்.பாலு மாற்று சபாநாயகராகச் செயல்பட்டார்.

இன்று மாலை, மாற்று சபாநாயகராகச் செயல்பட்டு மக்களவையை வழிநடத்திய ஆ.ராசாவுக்கு  அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.