எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், வசதிகள் இருந்தாலும், பொறுப்பில் இருந்தாலும் சிலர் தன்னிலை உணர்ந்து இக்கட்டான சூழல்களை கடந்து சென்று விடுவார்கள். அது அவர்களின் பண்பு. ஆனால், தான் பெரிய பதவியில் இருக்கிறோம். தான் மட்டுமே சிறந்த அறிவாளி. தான் இந்த பகுதியின் குறுநில மன்னர் என நினைத்துக் கொள்ளும் சிலர் தன்னிலை மறந்து எளியோர்கள் மீது நாகரீகமற்ற முறையில் கடிந்து கொள்வார்கள். சபை நாகரீகம் கருதாமல் அவமானப்படுத்துவார்கள். அப்படி ஒரு சம்பவம் ஆ.ராஜா மூலம் திமுக கடைக்கோடி தொண்டர் ஒருவருக்கு எற்பட்டுள்ளது.

  

இந்தியாவில் புதிதாக வேளாண் மசோதா சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இளைஞரணித் தலைவர் உதயநிதி, காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் பங்கேற்றனர். அந்த வகையில், பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பங்கேற்றார்.

அப்போது, கூட்டத்தில் மத்திய அரசின் விவசாய சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் என்று சில கருத்துகளை அவர் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த ஒரு திமுக தொண்டர் திடீரென ஆ.ராசா வாழ்க என்று முழக்கமிட்டதால் அவரின் பேச்சுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால், கோபமடைந்த ஆ.ராசா, ‘யார்ரா அவன்... அவனைத் தூக்கி வெளியே போடுங்க... அந்த நாயை தூக்கி வெளியே போடுங்க’என்று டென்ஷன் ஆகிவிட்டார். மேலும், ஆ.ராசா, அந்த திமுக தொண்டரை நாய் என்று குறிப்பிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர், எம்.எல்.ஏ, என பல பதவிகளை வகித்தவர்...  பேச்சாளர், திறமையாளர், பண்பாளர் என்றெல்லாம் போற்றப்படும் ஆ.ராசாவின் இந்தப்பேச்சு அவரது ஆணவத்தை, அகம்பாவத்தை வெளிப்படுத்தி விட்டது என்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள்.