தமிழக அரசியல் அரங்கை கடந்த பத்து நாட்களாக ஒரு பெயர் அதிரவைத்துள்ளது. எல்லா அரசியல் தலைவர்களின் கண்களும் அந்த ஒற்றைப் பெயர் மீதுதான் உள்ளன. அது டைட்டிலில் நீங்கள் வாசித்த அதே ‘பெருமாள்’ எனும் பெயர்தான். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது சென்டிமெண்டின் படி தன்னைச் சுற்றி பெருமாளின் அவதாரப் பெயர்களைக் கொண்டவர்களைத்தான்  பர்ஷனல் செக்யூரிட்டி ஆபீஸர்களாக காவலுக்கு நிறுத்துவார்! என்பதை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக விரிவாக எழுதியிருந்தோம். இந்த சிறப்பு செய்திக்காக ஏகப்பட்ட அப்ளாஸ் வாங்கியது ‘ஏஸியாநெட் தமிழ் இணையதளம்’. 
 
பெருமாளின் அவதாரப் பெயர்களைக் கொண்ட அந்த பி.எஸ்.ஓ.க்களில் பெருமாள்சாமியும் ஒருவர். ஜெயலலிதா முதல்வராக, எதிர்க்கட்சி தலைவராக, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக என பல நிலைகளில் கோலோச்சியபோது அவரது பாதுகாப்பு வளையமாக இருந்த காவல்துறை அதிகாரிகளில் இந்த பெருமாள்சாமி மிக முக்கியமானவர். ஜெ.,வின் நல்லது, கெட்டது, சுகம், துக்கம், ராசி, சறுக்கல், பிரார்த்தனை, பரிகாரம், வெற்றி, தோல்வி, சந்தோஷம் என எல்லாவற்றையும் அறிந்த மனிதர். 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் காணாமல் போயிருந்த இந்த மிக முக்கியமான மனிதர், சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஃபாரீன் டூரின் போது அவரது மெய்காவலராக வெளிநாட்டு அரங்குகளில் அவரை நெருங்கி நின்றார். ஜெ.,வின் பர்ஷனல் பாதுகாப்பு அதிகாரியான பெருமாள்சாமியை தனது பின்னே பாதுகாப்பு அரணாய் நிறுத்தியதன் மூலம் எடப்பாடியாரின் கெத்து உயர்ந்ததாக ஒரு கூல் விமர்சனம் எழுந்தது. 

ஃபாரீனில் கோட் சூட் சகிதமாக வலம் வந்த எடப்பாடியாருக்கு நிகராக பெருமாள்சாமியையும் கவனித்தனர் தமிழக அரசியல் தலைவர்கள். இந்த பெருமாள்சாமி இப்படியொரு பாசிடீவ் பரபரப்பைக் கிளப்பிட, இன்னொரு பெருமாளோ தமிழக வி.ஐ.பி. ஒருவருக்கு நெகடீவ் சிக்னலாக மாறியிருக்கிறார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைதாகி திகார் சிறையிலிருக்கிறார் சிதம்பரம். அவரது கைதுக்கும், அவர் மீதான வழக்கின் இறுக்கத்துக்கும் காரணம் திகார் சிறையின் கிரிமினல் குற்றவாளியான ராணி முகர்ஜி. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனரே இவர்தான். இவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் கைதாகி இருக்கிறார். 

ஆனால் சிதம்பரமோ தான் என்றுமே ராணி முகர்ஜியை சந்தித்ததே இல்லை! என சாதித்து வருகிறார் இத்தனை நாள் வழக்கு விசாரணையில். ஆனால் ராணியோ சில நாட்கள், தேதிகளை குறிப்பிட்டு அன்று தான் அவரை சந்தித்ததாக சொல்கிறார். அதையும் மறுக்கிறார் ப.சிதம்பரம். இந்த நிலையில்தான் ராணியை சிதம்பரம் சந்தித்தாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, அவரது முன்னால் பர்ஷனல் செயலாளரான கே.வி.பெருமாளை விசாரித்து வருகிறது சி.பி.ஐ.  கடந்த பத்தாம் தேதி மட்டும் சிதம்பரம்- ராணியை சந்தித்தாரா இல்லையா? சந்தித்தார் என்றால் , ஏன்? எங்கே? என்கிற கேள்வியை மட்டும் சுமார் ஆறு மணி நேரம் பல ஆங்கிள்களில் கேட்டு விசாரித்திருக்கின்றனர். 

கார்த்தியின் அறிவுறுத்தலின் படி ராணியையும், சிதம்பரத்தையும் சந்திக்க வைத்ததே இந்த பெருமாள்தான் என்பதே சி.பி.ஐ.க்கு கிடைத்திருக்கும் மிக முக்கிய உளவு தகவல். அதனால்தான் அவரை இந்த நெருக்கு நெருக்குகிறார்கள். ஒருவேளை அந்த சந்திப்பு நடந்திருந்து, அதை பெருமாள் ஒப்புக்கொண்டு, அந்த நாள், நேரம் ஆகியவற்றை ஒப்புவித்து, அவையும் சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் வாயிலாக உறுதியாகிவிட்டால் சிதம்பரம் மீதான வழக்கின் கரங்கள் தாறுமாறாக இறுகிவிடும். எனவே சிதம்பரத்தின் வாழ்க்கை இந்த பெருமாள் கையில் என்கிறார்கள். ஆக ‘பெருமாள்’ எனும் ஒரே பெயருடைய இரண்டு வி.வி.ஐ.பி.க்களின் பழைய ’பர்ஷனல்’ நபர்களால் தமிழக அரசியல் அதிர்ந்து கிடக்கிறது.