திருவாரூரில் வாங்கிய காசுக்கு ஓட்டுப் போடாமல் ஏமாற்றிய வாக்காளர்களை திட்டி வேட்பாளர் ஒருவர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இத்தேர்தலில் ஆளும் அதிமுகவைவிட திமுக அதிகமாக வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், வரும் 6ம் தேதி பதவி ஏற்க உள்ளனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துவருகிறார்கள். அதேபோல நன்றி அறிவிப்பு போஸ்டர்களையும் ஒட்டிவருகிறார்கள். இந்நிலையில் வாங்கிய காசுக்கு ஓட்டுப் போடாமல் ஏமாற்றிய வாக்களர்களைத் திட்டி திருவாரூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


திருவாரூரில் கோட்டூர் ஒன்றியத்தில், ‘காசு வாங்குன நாயே... ஓட்டுப்போட்டாயா“ என்று பெயர் குறிப்பிடாமல் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஊரெங்கும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி காசு கொடுத்து தோற்ற வேட்பாளர்தான் இந்த போஸ்டரை ஒட்டி இருக்க வேண்டும் என்பதால், யார் அவர் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம். ஆனால், வாக்காளர்கள் கொடுத்த காசுக்கு  ஓட்டுப் போடவில்லை என வேட்பாளர் ஒருவர் திட்டி போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரை யார் ஒட்டியது என கோட்டூர் போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.