மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாறும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், “களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தையாக நடித்த என்னை தமிழ் சினிமா வாரி எடுத்துக்கொண்டது. அதுபோல தற்போது செல்லும் இடங்களில் எல்லாம் தமிழக மக்கள் என்னைக் குழந்தையாக வாரி எடுத்துக் கொள்கிறார்கள். தமிழகத்தில் நேர்மையானவர்கள் ஏராளம் உள்ளனர். அவர்களை நம்பிதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். மக்களுக்கு என்ன தேவை, நல்ல ஆட்சி எது என்றெல்லாம் ஆட்சிக்கு வருவோர் யோசிக்கத் தேவையில்லை. மக்களைக் கேட்டாலே தங்களின் தேவை என்ன, எது நல்லாட்சி எனக் கூறிவிடுவார்கள்.
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வரும்போது தமிழக மக்களின் கல்வித் தரமும் வாழ்க்கைத் தரமும் நிச்சயம் உயரும். அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்யத்தான். சேவைகளை மக்கள் கெஞ்சிக் கேட்டுப் பெறத் தேவையில்லை. அதுபோன்ற ஓர் ஆட்சியை வழங்க மக்கள் நீதி மய்யம் எனும் அற்புதத் தேரை அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு இளைஞர்களும், இளம் பெண்களும், பெண்களும் தேர்தலின்போது மறக்காமல் செல்லுங்கள். எங்கள் கரங்களை வலுப்படுத்துங்கள்.
மக்கள் அனைவரையும் தலைவர்களாகவும், என்னை உங்களில் கருவியாகவும் நான் பார்க்கிறேன். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் திறந்த சாக்கடைகள்தான் உள்ளன. ஆரோக்கியம் பற்றி பேச அருகதையே இல்லாத அரசு இங்கு நடந்துகொண்டிருக்கிறது. எங்களுடைய ஆட்சியில் வீட்டுக்கு ஒரு கம்யூட்டர் தருவோம். அது இலவசம் அல்ல. மனித வளத்தில் அரசு செய்யும் முதலீடு. மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாறும். இந்தியாவின் தென்னக நலம் நாடும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும். நேர்மையான ஆட்சி நடக்கவும் நேர்மையானவர்கள் ஆட்சியில் அமரவும் மக்கள் நீதி மய்யத்தின் கரங்களை வலுப்படுத்துங்கள்" என்று கமல்ஹாசன் பேசினார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 5, 2021, 8:48 PM IST