வேலூரில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்விதமாக மீண்டும் தேர்தல் பணியைத் தொடங்கியிருக்கிறார் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம்.
வேலுாரில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டதால், கடைசி கட்டத்தில் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இந்த நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையில் தேர்தலை நடத்த அதிமுக, திமுக வேட்பாளர்கள் முயற்சி செய்தார்கள். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை.


இந்நிலையில் வேலூர் தொகுதியில் மீண்டும் தேர்தல் பணிகளை அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வருமான வரித் துறையின் நடவடிக்கையால் வேலுாரில்  தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ரத்து செய்யும்படி 17-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம்.அன்று மாலையே மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மே 19-ல் தேர்தல் நடத்த மனு கொடுத்தோம். 
முறையாக தேர்தல் நடந்த மூன்று மாதங்கள் ஆகும் என்று அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். எனவே, தற்போது தேர்தல் ஆணையத்துக்கு முறையாகப் பரிந்துரை செய்து தேர்தலை நடத்தக்கோரி குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியிருக்கிறோம். வேலூரில் தபால் ஓட்டுகள் பதிவு முடிந்த நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பிரதமரை தேர்வு செய்யும் உரிமை வேலுார் மக்களுக்கு மட்டும் கிடைக்காமல் போய்விட்டது.

.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தால்தான் தேர்தல் ரத்து ஆனது. அதற்காக அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. அவரை வைத்தே தேர்தல் நடத்த வேண்டும். அவரை தோல்வியடையச் செய்ய வேண்டும். தற்போது தேர்தல் பணியை மீண்டும் தொடங்கிவிட்டேன். முதல் கட்டமாக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறேன்” என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.