தமிழகத்தில் கடந்த 2016 ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் நீண்ட இழுபறிக்கு பிறகு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் இருக்கும் ஊரக பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்க்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்று இன்று மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

இதனிடையே சேலம் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட 90 வயது மூதாட்டி ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட முருங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகவல்லி. தற்போது இவருக்கு 90 வயது ஆகிறது. சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக முருங்கப்பட்டி ஊராட்சித் தலைவராக பணியாற்றி பல நலத்திட்டங்களை கிராமத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

இந்தநிலையில் தற்போது நடைபெற இருக்கும் ஊரக பதவிகளுக்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட முடிவெடுத்த அவர் தனது மகன்,மருமகள்,குடும்பத்தினர், நண்பர்கள், ஊர் மக்கள் என அனைவருடனும் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அங்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த வேட்பாளர்கள், மூதாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதை காண முடிந்தது.

90 வயதில் ஊராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட மூதாட்டி ஒருவர் விண்ணப்பித்த சம்பவம் இளைஞர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.