ஊரடங்கு குறித்து ஆலோசனை நடத்தும் முதல்வர் பழனிசாமி, வாழ்வாதார உதவி, நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு குறித்து தான் மீண்டும் முன்வைத்திருக்கும் ஆலோசனைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஊரடங்கு குறித்து இன்று ஆலோசனை நடத்தும் முதல்வர் பழனிசாமிக்குப் பின்வரும் ஆலோசனைகளை மீண்டும் முன்வைக்கிறேன்.

1) வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடித்தட்டு மக்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உயிரூட்டும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5,000 ரூபாய் நேரடியாகப் பண உதவி வழங்கிட வேண்டும்.

2) ஊரடங்கு கால மின்கட்டணத்தினை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி, உடனடியாகக் குறைத்திட வேண்டும்.

3) நியாயவிலைக் கடைகள் மூலம் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசங்களை அளித்திட வேண்டும்.

4) பல்கலைக்கழக இறுதியாண்டு பருவத்தேர்வு மற்றும் பிற வருடங்களின் பருவத்தேர்வுகளை ரத்து செய்து, அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.

5) முன்களப் பணியாளர்களாக விளங்கும் மருத்துவர், செவிலியர், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து கரோனா போர் வீரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை அளித்திட வேண்டும்.

6) கொரோனா நோய்ப் பாதிப்புக்குள்ளான முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த நிதியை உடனே வழங்கிட வேண்டும்.

7) கொரோனா சோதனை குறித்த விவரங்களை விமான நிலையம் வாரியாக, மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட வாரியாக வழங்கிட வேண்டும்.

8) கொரோனா சமூகப் பரவல் ஆகிவிட்டதா இல்லையா என்பது பற்றி, தெளிவான அறிக்கை பெற, தொற்று நோய் மருத்துவ நிபுணர்கள் கொண்ட தனிக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும்.

விடிய விடிய ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப 'பல்டி' அடித்துவிட்டு, பின்னர் ஊடகங்கள் முன் 'ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்' என்று வழக்கம்போல் கூறாமல், இந்த ஆலோசனைகளைக் காதுகொடுத்துக் கேட்டு முதல்வர் பழனிசாமி அவர்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேநேரத்தில், இந்தியாவில் இரண்டாவது அதிகபட்ச நோய்த் தொற்றுக்கு உள்ளான டெல்லியில் நடைபெறும் கரோனா பரிசோதனை விவரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று முதல்வரைச் சந்தித்த நிபுணர் குழுவே சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ள நிலையில், டெல்லி அரசு  கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, குருதி நீரியல் (Serological Test)பரிசோதனை முறையில் சோதனை செய்து, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் அனைவரையும் விரைவில் கண்டறியத் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அது போன்ற பரிசோதனை முறையை தமிழ்நாட்டிலும் கடைப்பிடித்து நேற்றைய தினம் 3,940 பேருக்கு நோய்த் தொற்று என்று உருவாகியுள்ள ஆபத்தான சூழலை அடியோடு நீக்குவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமி எடுக்க வேண்டும் என்றும், பரிசோதனையை அதிகரிக்கக் கேட்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை மிரட்டும் அமைச்சர் உதயகுமாருக்கு முதல்வர் முடிந்தால் கொரோனா நோயின் தீவிரத்தைப் புரிய வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று  ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.