தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சராசரியாக 77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.


தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் இரண்டு கட்டமாக டிச. 27 மற்றும் டிச. 30 ஆகிய தேதிகளில் நடந்தன. மொத்தம் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு முதல் கட்டமாக 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கு  டிச. 27 அன்று தேர்தல் நடைபெற்றது. சுமார் 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில், 76.19 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 46 ஆயிரத்து 639 பதவிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.


காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிக்க 1.28 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர். இதற்காக 25,0088 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரே நேரத்தில் 4 பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றதால், ஒவ்வொரு வாக்காளரும் தலா 4 வாக்குகள் பதிவு செய்தனர். காலை முதலே ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. இந்தத் தேர்தலில் 78 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. எனவே இரண்டு கட்டங்களையும் சேர்த்து சராசரியாக 77 சதவீதம் பேர் வாக்களித்துள்ளார்கள்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். தேர்தலில் இரு கட்டங்களாகப் பதிவான வாக்குகள் 310 ஓட்டு எண்ணும் மையங்களில் வரும் வியாழன் அன்று எண்ணப்பட உள்ளன.