இந்திய அரசியலின் மூத்த தலைவர். 13 முறை ஒரே கட்சியின் சார்பில்   வென்று சட்டமன்றம் சென்றவர். ஒருமுறை கூட தோல்வியை சந்தித்க்காதவர்.  5 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர். அரசியலோடு, சினிமா, கலை, இலக்கியம் என அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டவர் திமுக தலைவர் கலைஞர்.

1924 ம் ஆண்டு ஜூன் மாதம் 3 ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் பிறந்த கலைஞர், தமது சிறு வயதிலேயே, நீதி கட்சியின் கொள்கையால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்தவர்.

அதேபோல், சிறுவயதிலேயே முரசொலி என்ற கையெழுத்து பிரதியை தொடங்கி இன்று வரை அதை இடைவிடாமல் நடத்தி வருபவர்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் அன்பு தம்பியாக விளங்கி, அண்ணா மறைவுக்கு பின்னரும் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம், அவரால் உருவாக்கப்பட்ட திமுகவை இன்றுவரை தலைமை ஏற்று வழி நடத்தி வருபவர்.

தமிழ் திரைப்பட உலகில், மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய பராசக்தி, தொடங்கி எண்ணற்ற படங்கள், கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை இன்றும் பறை சாற்றி கொண்டிருக்கின்றன.

கலைஞரின் மேடை பேச்சு அன்றும், இன்றும், என்றும் இளைஞர்களை கவர்ந்திழும் காந்த சக்தி நிறைந்தவை. அவருடைய நாக்கையும், வாக்கையும் புறம் தள்ளிவிட்டு தமிழக அரசியல் வரலாற்றையோ, கலை இலக்கிய வரலாற்றையோ எழுத முடியாது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஏர் முனையை விட கூர் முனையான அவரது எழுத்தின் வேகமும் சற்றும் குறைந்ததல்ல, குறளோவியம், சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, தென் பாண்டி சிங்கம், பாயும் புலி பண்டார வன்னியன் போன்ற அவரது  எத்தனையோ படைப்புகள், காலத்தை வென்ற காவியங்கள்.

நல்ல பேச்சாளர், நல்ல எழுத்தாளர், நல்ல அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி அவர் ஒரு நல்ல நிர்வாகி என்பதையும் மறக்க முடியாது.

எம்.ஜி.ஆர் என்னும் வலிமை வாய்ந்த அரசியல் சக்தியின் முன்னால், திமுக அரியணை எற முடியவில்லை என்றாலும், தொண்டர்கள் யாரும் அதிமுகவுக்கு தாவி விடாமல் இருக்கும் வகையில், திமுகவை பத்தாண்டுகளுக்கும் மேல் ராணுவத்தை போல கட்டி காத்தவர் கலைஞர்.

முரசொலி கையெழுத்து பிரதியாக தொடங்கிய நாளில் இருந்து அண்மைக்காலம் வரை, அவரது எழுத்தை சுமக்காத நாளே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

"உடன் பிறப்பே" என்று அவர் எழுத்திலும், பேச்சிலும் உச்சரிக்கும் ஒற்றை வார்த்தை, ஓராயிரம் யானைகளை வென்ற  கருணாகர தொண்டைமானுக்கு நிகரான வலிமையை ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பத்து வயதில் அரசியலுக்கு வந்த கலைஞர், அண்மைக்காலம் முதல் ஓய்வறியா தமிழனாகவே வலம் வந்து கொண்டிருந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி, இன்று வரை அவர் கையில் எடுக்காத போராட்டமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, அவரது அரசியல் வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க போராட்டத்தால் மட்டுமே செதுக்கப்பட்டதாகும்.

1957 ம் ஆண்டு முதன் முதலில், குளித்தலை தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற கலைஞர், அதற்கு அடுத்து 1984 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை தவிர, அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றிவாகை சூட்டியுள்ளார். அதாவது 13 தேர்தல்களில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.

அவரது வாழ்க்கையில், சட்டமன்ற அனுபவம் என்பது 60 ஆண்டுகள். அதாவது வைரவிழா ஆண்டுகள். இந்தியாவில் கலைஞரை தவிர வேறு யாரும், 40 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு கட்சிக்கு தலைவராக இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அதேபோல் 60 ஆண்டுகள் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரும் இல்லை என்றே சொல்லலாம்.

தேசிய அரசியல் தொடங்கி, தமிழக அரசியல் வரை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தலைப்பு செய்தியாகவே இருந்து வந்த கலைஞர், வயது முதிர்ச்சி காரணமாக, சிகிச்சை பெற்று வருவதால், அவரது பேச்சுக்கும் எழுத்துக்கும் சிலமாதங்கள் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

எனினும், அவருக்காக நடத்தப்பட  இருக்கும் சட்டமன்ற வைர விழாவில்,பஞ்சாப், மேற்கு வங்கம், பீஹார், கர்நாடகா, ஆந்திரா, கேரள  மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த  ஏழு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள். அந்த விழாவில் அவர் பேசுவார் என்றே தொண்டர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மருத்துவர்கள் அனுமதி அளித்தால் கலைஞர் நிச்சயம் பேசுவார் என்றே ஸ்டாலினும், டி.கே.எஸ். இளங்கோவனும் கூறி வருகின்றனர். வார்த்தைகளால் இந்த உலகத்தை வளைத்த கலைஞரின் குரல், மேடையில் மட்டும் அல்ல, சட்டமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

94 வயதை நெருங்கும் கலைஞரின் வார்த்தை ஒவ்வொன்றும், ஒரு நூற்றாண்டின் அரசியல் அனுபவம் அல்லவா?