முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு பரிந்துரை செய்து கடந்த செப்டம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் கவர்னர் பதில் அளிக்காமல் உள்ளார். இந்த 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக கவர்னர் விரைவில் முடிவை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

தமிழக அமைச்சரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதை அவர் சட்டப்படி ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதைத் தவிர்த்து அவர் அந்த பரிந்துரையை நிராகரிக்க சட்டத்தில் இடமில்லை.

தேவைப்பட்டால் மத்திய அரசிடம் ஆளுநர் கருத்து கேட்கலாம். 27 ஆண்டுகள் அவர்கள் சிறைவாசத்தை அனுபவித்துள்ளனர். அதனால் அவர்களை தமிழக அரசு விடுதலை செய்வதில் தவறில்லை என மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த வாரத்தில் திடீரென டெல்லி சென்றார். பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். அப்போது, கஜா புயல் பாதிப்புக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு விரைவில் அளிக்க வேண்டும் என்றும், மேகதாது பிரச்னை தொடர்பாகவும் அவர் பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு முடிந்ததும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கையும் தமிழக கவர்னர் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு முடிந்து கவர்னர் சென்னை திரும்பினார்.

தமிழக கவர்னர் டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை செயலாளரை சந்தித்து பேசிவிட்டு வந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாகவே  அவர் டெல்லியில் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே  7 பேரை விடுவிக்க கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சேர்ந்த, அப்பாஸ் உள்ளிட்டோர் சார்பில் 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. எழுவர் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அந்த மனு தொடர்பாக பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆளுநர் பிரதமரைச் சந்தித்த சில தினங்களில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை நேற்று  தாக்கல் செய்துள்ளது. அதில், எழுவர் விடுதலைக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவைக் காலாவதியான மனுவாக அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இப்படி ஏழு பேரை விடுதலை செய்வதற்கான அனைத்து கூறுகளையும் மத்திய அரசு செய்து வருவதால், இந்த 7 பேர் விடுதலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எத்ர்பார்க்கப்படுகிறது.