அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோற்கும் என்று உளவுப்பிரிவு அறிக்கை கொடுத்திருப்பதால் முதல்வர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சாகுல்ஹமீதை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் அதிமுகவினருக்கு அனைத்து தொகுதிகளிலும் தோற்றுவிடுவோம் என்ற பயம் வந்துவிட்டது. துரோகம் என்றைக்கும் வென்றதாக வரலாறு கிடையாது என்றார். 

தமிழகத்தில் வரும் 23-ம் தேதிக்கு பிறகு அதிமுக ஆட்சி இருக்காது. அதிமுக ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம். திமுகவுக்கும், அமமுகவுக்கும் ரகசிய உறவு இருப்பதாக கூறுவது தவறு. திமுகவுடன் எங்களுக்கு எந்த ரகசிய உறவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 18 தொகுதிகளிலும் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் எனது ஆதரவாளர்களான 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதற்கு நீதிமன்றம் செக் வைத்துள்ளது. 

அதிமுகவினர் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்று பணத்தை அள்ளி வீசினார்கள். ஆனால் மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை என்பது 23-ம் தேதி தெரியும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவினர் ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தார்கள். அப்படியிருந்தும் வெற்றி பெற முடியவில்லை. அதேநிலை தான் இந்த தேர்தலிலும் அதிமுகவிற்கு ஏற்படும்.  

நடிகர் கமல்ஹாசன் இந்து மதத்தை குறிப்பிட்டு தீவிரவாதம் என்று கூறியிருக்க கூடாது. கமல் தேவையில்லாமல் ஒரு பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பதால் சினிமா வசனம் போல இங்கு பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் கடந்த சில தினங்களாக முதல்வர் பழனிசாமி என் மீது மிகுந்த ஆத்திரத்தில் பேசி வருகிறார். அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோற்கும் என்று உளவுப்பிரிவு அறிக்கை கொடுத்திருப்பதால் முதல்வர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். இதனால் தான் அவர் என் மீது ஆத்திரப்படுகிறார். 7 நாளில் அவரது பதவி பறி போய் விடும். அவருக்கு புரட்சி பெருந்தகை என்ற பட்டம் பொருந்தாது. ‘’புரட்சி பெரும் தொகை’’ என்பதுதான் பொருந்தும் என்று கூறினார்.