இன்றைய தீர்ப்பு 69 சதவீதத்தைப் பாதிக்கும். அதனால், குலசேகரன் குழுவை செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற முடியும்.
வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் மூத்த வழக்கறிஞரை வைத்து தமிழக அரசு வாதாடவில்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் சிவி சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இட ஒதுக்கீடு வழங்குவதில் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலம். ஆனால்கு இன்று அதற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்ததை உணர்ந்த ஜெயலலிதா இதற்கான சட்டம் இயற்றி, அதை 9-ஆவது அட்டவணையில் சேர்ந்து சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். தற்போது வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. தரவுகள் சரியாக வழங்கவில்லை என நீத்மன்றம் கூறியது.

1985-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அம்பா சங்கர் அறிக்கையின் படி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி என்ற பிரிவு உருவாக்கப்பட்டு, 50 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த அறிக்கையை அரசு மதுரை உயர் நீதிமன்றத்தில் அரசு ஏன் தாக்கல் செய்யவில்லை? கவனக்குறைவா அல்லது திட்டமிட்டு விடப்பட்டதா என்று அரசு தெளிபடுத்தவேண்டும். இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என ஒப்புக்கொண்ட நீதிமன்றம், முழுமையான தரவுகள் இல்லை எனச் சொல்லியுள்ளது. 1931ம் ஆண்டு இந்தியாவில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புதான் தற்போதுவரை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அமல்படுத்தப்படவில்லை. அம்பா சங்கர் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அரசு சொல்கிறது. ஆனால் 2010ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி, அம்பா சங்கர் அறிக்கையின் பேரில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார். அதன்படி இட ஒதுக்கீடு இன்றுவரை தொடர்கிறது. 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவேண்டும் என்றால் முழுமையான சாதி வாரி கணக்கெடுப்பு தேவை என்று 21.12.2020 அன்று புதிதாக நீதியரசர் குலசேகரன் தலைமையில் குழு தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இதை நடைமுறைப்படுத்தவில்லை. இட ஒதுக்கீடு வழக்கில் மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடவும் இல்லை. அம்பா சங்கர் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. குலசேக்ரன் குழு ஏன் முடக்கப்பட்டது?

இன்றைய தீர்ப்பு 69 சதவீதத்தைப் பாதிக்கும். அதனால், குலசேகரன் குழுவை செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற முடியும். தமிழகத்தில் லாட்டரியால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றியது அதிமுக அரசுதான். இதேபோல ஆன்லைன் ரம்மியை தடை செய்ததும் அதிமுக அரசுதான். இதுதொடர்பான வழக்கில் தமிழகத்திலிருந்து ஒரு வழக்கறிஞரை நியமித்து அரசு வாதாடவில்லை. பொதுமக்களைப் பாதிக்கும் எந்தச் சட்டத்தையும் இந்த அரசு துச்சமாகவே எண்ணுகிறது. இந்த ஓராண்டில் திமுக அரசு செய்த சாதனை என்னவெனில் பாலியல் கூட்டு வன்முறை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த சம்பவம் தற்போது எங்கும் நிறைந்துள்ளது. அன்று பொள்ளாச்சி சம்பவத்தை பூதாகாரமாக்கியவர்கள் இன்று வாய்மூடி கிடக்கிறார்கள். இன்று பெண்கள் மட்டுமல்ல யாருக்குமே பாதுகாப்பு இல்லை.
பெண்களுக்கான அனைத்து திட்டங்களையும் திமுக அரசு ரத்து செய்து வருகிறது. தாலிக்கு தங்கம், பணிக்குச் செல்லும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் மானிய திட்டம், பசுமை வீடு திட்டம் என பெண்களை குறிவைத்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது'' என்று சி.வி.சண்முகம் கூறினார்.
