தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் இந்த ஆண்டு பயங்கர குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீர் கிடைக்காததால் பொது மக்கள் ஊரை காலிசெய்து வருகின்றனர்.

ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். தண்ணீர் இல்லாததால் ஏராளமான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து அவசர அவசரமாக லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையின் இன்றைய குடிநீர் பஞ்சத்துக்கு காரணம் திமுகதான் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் 620 ஏரிகளை திமுக கபளீகரம் செய்ததால் தான் இன்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அக்கட்சியினர் நடத்தும் மது ஆலைகளில் மழை பெய்யும் வரை உற்பத்தி செய்ய மாட்டோம் என்று முடிவெடுத்தால் பல லட்சம் லிட்டர் குடிநீர் மிச்சமாகும் என குறிப்பிட்டார்.

லாரி உரிமையாளர்களாக அக்கட்சியினர் இருப்பதால்தான் மக்களவையில்  டி.ஆர்.பாலு, 'தண்ணீரை லாரியில் கொண்டு வர வேண்டும்' என்கிறார் என எச்.ராஜா கடுமையாக குற்றம்சாட்டினார்.